புலிகள் அழிந்தது கருணாவினால்.. தமிழரசு அழிகிறது சுமந்திரனால்

Report Print Jeslin Jeslin in அரசியல்
340Shares

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு கருணா எவ்வளவு தூரம் காரண கர்த்தாவாக இருந்தாரோ அதே போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கும் சுமந்திரன் காரண கர்த்தாவாக இருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்ல இன்றைக்கு தமிழரசுக் கட்சியின் அழிவுக்குக் கூட சுமந்திரனே காரண கர்த்தாவாக இருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசுக் கட்சியில் இருந்தும் பலர் வெளியேறுவதற்குச் சுமந்திரனே காணம். தமிழ்க் கட்சிகளை அழிப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியால் அவர் களமிறக்கப்பட்டிருகு்கின்றார்.

கட்டப்பிராயிலுள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியைச் சுமந்திரன் அழிப்பதாகவே அந்தக் கட்சியின் மகளிர் அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அந்தக் குற்றச்சாட்டு என்பது நிதர்சனமான உண்மை. அது இன்று நேற்றல்ல. ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

அதாவது ஐ.தே.கவால் கொண்டு வரப்பட்ட ஒருவர்தான் சுமந்திரன் என்பது பலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

குறிப்பாக கொழும்பில் இருக்கக்கூடிய ஊடகவியலாளர்கள் உட்பட பலர் மட்டத்திலும் அதேபோல கூட்டமைப்பிலுள்ள பலருக்கும் இது தெரிந்திருந்தது. அவ்வாறாக அவர் கூட்டமைப்புக்குள் வந்த பின்னர் தான் கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறியிருந்தனர்.

அதேபோல இன்றைக்கு தமிழரசுக் கட்சியிலிருந்தும் பலரும் வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழரசுக் கட்சியும் சிதைவதற்கு இன்னும் சொல்லப் போனால் அழிவதற்குச் சுமந்திரனே காரண கர்த்தாவாக இருக்கின்றார்.

சுமந்திரனைப் பொறுத்தவரை இலங்கையில் இவ்வாறான கட்சிகள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என்ற அடிப்படையில் அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகச் சிந்திக்கின்றதாகவே கருதுகிறோம்.

குறிப்பாக புலிகளின் அழிவுக்கு கருணா என்று சொல்லப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வளவு தூரம் காரண கர்த்தாவாக இருந்தாரோ அதேபோல கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் அழிவிற்கு சுமந்திரனும் நிச்சயமாக காரண கர்த்தாவாகவே இருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.