மனோவுடன் கொழும்பில் களமிறங்கும் வடக்கு - கிழக்குத் தமிழ்ப் பெண் யார்?

Report Print Rakesh in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 10 பேர் களமிறங்கவுள்ளனர் என்றும், கொழும்பு மாவட்டத்தில் தன்னுடன் பெண்ணொருவர் போட்டியிடுவார் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியல் தொடர்பிலேயே சிறு பிரச்சினை இருக்கின்றது. அதனைப் பேச்சு மூலம் தீர்க்கலாம் என நம்புகின்றேன். எனவே, இன்னும் இரு நாட்களில் விபரம் அறிவிக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர் ஒருவரைப் போட்டியிட வைப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

கண்டி மாவட்டத்தில் வேலுகுமாரும், பதுளையில் அரவிந்குமாரும், இரத்தினபுரியில் சந்திரகுமாரும், கேகாலையில் பரணிதரனும், கம்பஹாவில் சசியும் போட்டியிடுவார்கள்.

கொழும்பில் என்னுடன் மற்றுமொரு வேட்பாளர் போட்டியிடுவார். பெரும்பாலும் அது பெண் வேட்பாளராக இருக்கக்கூடும்" என குறிப்பிட்டுள்ளார்.

'கொழும்பு மாவட்டத்தில் நிச்சயமாக என்னுடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஒருவரைத்தான் போட்டியிட வைப்பேன். இது சம்பிரதாயம்' என்று கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் மனோ கணேசன் பேசும்போது தெரிவித்திருந்தார்.

அவர் தற்போது கொழும்பில் தன்னுடன் ஒரு பெண் வேட்பாளரே போட்டியிடக்கூடும் என்றும் கூறியுள்ளார். எனவே, மனோ கணேசனுடன் கொழும்பில் போட்டியிடும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அந்தப் பெண் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கொழும்புவாழ் தமிழர்களிடம் எழுந்துள்ளது.