எதிர்வரும் அமைச்சரவையிலும் நானே மீன்பிடி அமைச்சராக இருப்பேன் - டக்ளஸ்

Report Print Navoj in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெகு விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சுப் பதவியினை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கையளித்துள்ளனர். இனங்களுக்கிடையில் ஐக்கியத்தினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்துவதற்கும், கடற்தொழில் மக்கள் எதிர்கொள்கின்ற பிச்சினைகளை அந்த இடங்களுக்கு சென்று நேரில் ஆராய்ந்து அறிந்து தீர்வு காணுவதே இதன் நோக்கமாகும்.

அத்தோடு நாட்டு மக்களுக்கு போசாக்கான உணவை நியாயமான விலையில் கிடைக்க வைப்பதற்குமாக எனக்கு இந்த பொறுப்பினை வழங்கி உள்ளனர். இந்த பொறுப்பினை சரியாக செய்வேன் என்ற நம்பிக்கையில் எனக்கு தந்துள்ளனர்.

தற்போது தேர்தல் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் தங்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு எவ்வளவு தீர்வுகான முடியுமோ தெரியாது. இன்னும் ஒன்றரை மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்களது பிரச்சனை விரைவாக தீர்க்கப்படும்.

இதன் நம்பிக்கையை உங்களுக்கு வழங்கவே வந்துள்ளேன். வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளரால் ஏழு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். அத்தோடு மீனவர் சங்கங்களால் வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும். அதிலும் ஒன்றரை மாதங்களுக்குள் செய்யக் கூடியவை செய்து தரப்படும்.

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆட்சியமைத்து மீண்டும் அதில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் பதவியை பெற்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் குறித்த பகுதியிலுள்ள மீனவர்களின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றை விரைவில் நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மீன்பிடித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்ஷன் குரூஸ், வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர், உயர் அதிகாரிகள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.