தேர்தலை ஒத்திவைத்தால் அரசாங்கத்திற்கு பாதிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா என்ற கோவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுத் தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தால், அது அரசாங்கத்திற்கு பெரிய பாதிப்பாக அமையும் என கருத்து கணிப்பொன்றில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக அரசாங்கம் இந்த கருத்து கணிப்பை நடத்தியுள்ளதுடன் அனைத்து மாவட்டங்களில் தலா 200 பேருக்கு மேற்பட்டோரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாக காலம் கடந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் சில தலைவர்களின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்தின் பிரபலம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அரசாங்கம் கொரோனா அச்சுறுத்தலை தடுக்க தவறியுள்ளதாகவும் கருத்து கணிப்பில் இணைந்து கொண்ட பலர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மீதான மக்களின் விருப்பம் குறைந்து வரும் நிலைமையில் பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என கருத்து கணிப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.