அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட சார்ள்ஸ் நிர்மலநாதன்

Report Print Dias Dias in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்றைய தினம் நேரடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்றைய தினம் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக சிறைச்சாலையில் இருக்கும் 11 அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன், குறித்த சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகருடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் 11 அரசியல் கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் சிறைச்சாலையில் பாதுகாப்பு இல்லையெனின் உடனடியாக மகசின் சிறைச்சாலைக்கோ அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கோ மாற்றும்படி சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரியுள்ளார்.

இதற்கு சிறைச்சாலை அத்தியட்சகர் பதிலளிக்கையில், இங்கு அவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவும், பாரதூரமான நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகம் பூராகவும் கொரோனா தொற்றின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சம் அடைந்துள்ளனர். அரசாங்கம் சிறைக்கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

கைதிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று எற்படும் என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக்கொண்டார்.

மேலும், உடனடியாக சிறைச்சாலை ஆணையாளருடன் தொலைபேசியில் உரையாடி 11 அரசியல் கைதிகளின் பாதுகாப்பின்மை தொடர்பாக விளங்கப்படுத்தி அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து உடனடியாக 11 தமிழ் அரசியல் கைதிகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.