நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இன்னும் முடிவில்லை: ஆணைக்குழு உறுப்பினர்

Report Print Rakesh in அரசியல்

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடத்துவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜுவன் ஹுல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்பட்டு, கன்னி அமர்வு மே மாதம் 14 ஆம் திகதி நடைபெறும் என்று ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த கையோடு பொதுத்தேர்தலை தேர்தல் ஆணைக்குழு ஒத்திவைத்தது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையால் தேர்தல் சட்டத்துக்கு அமைவாக, ஏப்ரல் 25ஆம் திகதியிலிருந்து 14 நாள்களின் பின்னரே தேர்தலை நடத்த முடியும். அதேவேளை 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக, நாடாளுமன்றத்தை கலைத்து மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் மீண்டும் கூடுவதற்கான திகதி அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் நவம்பர் மாதமே நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக பரவலாக பேசப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜுவன் ஹுலிடம் ஊடகமொன்று வினவியது.

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். இப்போது வரையில் தேர்தலை எப்போது நடத்துவது என்று தீர்மானிக்கவில்லை என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.