காபந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைப்பது தொடர்பிலும், புதிய அரசாங்கம் அமைப்பதை கால தாமதிப்பது குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு காபந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளது.

அரசியலமைப்பின்படி பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் என்பன தற்போது பிற்போடப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு நாட்டின் உச்ச சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட அனுமதித்த கூடுதல் காலத்தை கணக்கிட்டால் ஜூன் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கூட்டமுடியாத நிலை ஏற்படும்.

இதன்போது நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று அதிகாரத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிலையின்படி மே 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

எனினும் நாட்டின் சுகாதார நிலைமைக் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையால் மே 14 நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது. எனவே ஜனாதிபதி இதனை பின்தள்ளி வைக்க முடியும்.

எனினும் நாடாளுமன்றத்தை கூட்டும் புதிய திகதி அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில் அரசியலமைப்புடன் நடப்பு விடயங்கள் முரண்படும் என்பதால் அரசாங்கத்துக்கு இரண்டு மார்க்கங்கள் உள்ளதை அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவசரகால நிலைமையின்கீழ் நாடாளுமன்றத்தை கூட்டி குறித்த அரசியலமைப்பில் காலம் தொடர்பான விடயத்தை மாற்றியமைத்தல் அல்லது உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை கோருதல் என்ற இரண்டு நடவடிக்கைகளே அரசாங்கத்தினால் எடுக்கப்பட முடியும் என்று அரசியல் தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.