வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் சென்றடைகின்றனவா..?

Report Print Sumi in அரசியல்

வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் சென்றடைகின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக வட பகுதியில் பொருளாதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.

வடபகுதியில் பெருமளவிலான மக்கள் அன்றாடம் கூலி தொழிலை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவரும் நிலையில் தற்போது நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது அத்தோடு மறு அறிவித்தல் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அன்றாடம் கூலி தொழிலுக்கு செல்பவர்கள் வேலை இல்லாது வீடுகளில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வறுமைக்கோட்டுக்குக் பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் மாவட்ட செயலகம் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

எனினும் குறித்த நிவாரண பொருட்கள் வறிய குடும்பங்களை சென்றடைகின்றனவா என்பதை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் குடும்பங்கள் பல்வேறுபட்ட இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். தமது கஷ்ட நிலையில் வங்கிகளில் சிறு கடன்களை பெற்று தற்போதைய நிலையில் அதனை செலுத்தமுடியாது உள்ளவர்களின் நிலை தொடர்பிலும் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.

அத்தோடு வங்கிகளும் குறித்த விடயத்தை கருத்தில் கொண்டு ஏழை மக்களைபாதிக்காத வண்ணம் தமது வங்கி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.