கொரோனாவுக்கு ஊழியர் சேமலாப நிதியை பழியிட அரசாங்கம் திட்டமிடுகிறது - வசந்த சமரசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள பின்னடைவுக்கு தீர்வாக ஊழியர் சேமலாப நிதியத்தின் வைப்பில் உள்ள தொகையில் 20 வீதத்தை உறுப்பினர்களுக்கு விடுவிக்கலாம் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்துள்ள யோசனையானது அரசாங்கத்தின் தோல்வி தன்மை காட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் பையில் இருந்து எடுத்து செலவிட வேண்டும் என்பது அரசாங்கத்தின் ஆலோசனையாக இருக்கின்றது.

வங்கியில் இருக்கும் பணத்தை எடுத்து இரண்டு மாதங்கள் சாப்பிடுங்கள் என்ற கதையையே இவர்கள் கூறுகின்றனர். எனினும் உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் சிங்கப்பூர் தனது மொத்த தேசிய உற்பத்தியில் 11 வீதத்தை கொரோனா வைரஸ் ஆபத்தை எதிர்கொள்ள ஒதுக்கியுள்ளது. பஹ்ரேன் 14 சத வீதத்தை ஒதுக்கியுள்ளது.

முன்னேறிய அபிவிருத்தியடைந்த நாடுகள் இதனை விட பெருந்தொகையை ஒதுக்கியுள்ளன. ஜேர்மனி 22 சத வீதத்தை ஒதுக்கியுள்ளது. நாம் கொரோனா ஆபத்தில் இருந்து நாட்டை மீட்க 0.30 வீதம் அதாவது 300 மில்லியன் அமெரிக்க டொலர்களே செலவாகும் என மதிப்பிட்டுள்ளோம்.

இது போதுமான தொகையல்ல. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்குள் ஊழியர் சேமலாப நிதியை பழிக்கொடுக்கவே அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. ஊழியர் சேமலாப நிதியை விடுவிப்பதன் மூலம் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓரளவு உத்வேகம் ஏற்படக் கூடும். இந்த உத்வேகத்திற்கு ஊழியர்களின் பணத்தை செலவிட அரசாங்கம் யோசனை முன்வைக்கின்றது. ஊழியர்களின் பணத்தை செலவிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அரசாங்கம் ஒன்று தேவையில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தோல்விடைந்துள்ளன என்பதை இந்த செயல் மூலம் அரசாங்கம் காண்பித்துள்ளது எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.