ஊரடங்கை மீறியவர்களில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என அறிவிக்கப்பட்டதா? உலமா கட்சி கேள்வி

Report Print Varunan in அரசியல்

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா என்று கேட்டால் அதற்கு அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊர்களில் மட்டும் ஊரடங்கு சட்டத்தை மீறுவதாக அதிகாரிகள் சிலர் காட்டி கொண்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது தொடர்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா என்று கேட்டால் அதற்கு அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

இருந்தபோதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்கின்ற சூழ்நிலையில் இன்று இந்த பிரச்சினை ஜனாதிபதியால் சிறப்பாக கையாளப்படுகின்றது. அந்த வகையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

இதனை விடுத்து மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அதிகளவான சம்பளத்தை வழங்கி மக்களின் வரிச்சுமையை அதிகரிப்பதை நாம் எதிரக்கின்றோம்.

இவ்வாறான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எமது சமூகத்திற்கு எவ்வித நன்மையும் இருக்க போவதில்லை.

இவர்களுக்கு சம்பளம் கொடுத்துக் கொண்டிருப்பதை விட அந்த பணத்தை வைத்து கொரோனா வைரஸை ஒழிப்பது நன்று என தெரிவிக்க விரும்புகின்றேன்.

இலங்கை அரசாங்கம் அனைத்து மக்களையும் வீட்டில் இருக்கும்படி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இங்குள்ள பெரும்பாலான மக்கள் இன மதம் கடந்து பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்று ஊரடங்கு சட்டத்தை மீறாமல் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மட்டும் ஊரடங்கு சட்டத்தை மீறுவதாக காட்டிக் கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கையில் ஊரடங்கை மீறியதால் கைது செய்யப்பட்டோர் சுமார் எட்டாயிரம் பேர். இவர்களில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்ததா?

ஆனால் வேண்டுமென்றே முஸ்லிம் ஊர்களில் மட்டும் ஊரடங்கு சட்டம் மீறப்படுவதாக இவ்வாறு குறை சொல்லிக் கொண்டிருப்பது உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்க விடயம்.

சிங்கள மக்கள் யாரும் சிங்கள மக்களே வீட்டில் இருங்கள் என்றோ தமிழ் மக்கள் தமிழ் மக்களே என விழித்து சொல்வதையோ நாம் காணவில்லை.

ஆகவே முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் புத்திமதி சொல்ல வேண்டும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும். தற்போது கொரோனா பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகும்.

இன்று வரை உலகில் இந்த நோயால் இறந்தோர் 98 வீதம் முஸ்லிம் அல்லாதவர்கள். எனவே தான் அனைத்து இலங்கையரும் வீட்டில் இருப்போம். முடிந்தளவு அரசின் உத்தரவுகளை பின்பற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.