அவலத்தில் வடக்கு மக்கள்! ஆளுநருக்கு மாவை அவசர கடிதம்

Report Print Rakesh in அரசியல்

ஊரடங்குச் சட்டத்தால் வடக்கு மாகாண மக்கள் அவலத்தைச் சந்தித்துள்ளனர். எனவே,வடக்கு மாகாணத்தில் வேலையற்றோர், நாளாந்தத் தொழிலாளர், வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பொதுவாக வாழ்வாதாரமற்றவர்கள், ஊட்டச்சத்தற்ற குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் முதலான தொகுதியினருக்கு உணவோ, உணவைப் பெற உதவிகளோ வழங்கப்படாமை தொடர்பில் உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காலமும் முன்வைக்கப்படும் சில ஆலோசனைகளும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிகாரமளித்தலும் என்ற தலைப்பில் மாவை சேனாதிராஜா இன்று ஆளுநருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்திலலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

இன்று (08) தங்களால் கூட்டப்படவுள்ள கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களின் பொருட்டு சில ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கின்றேன்.

1. அரசின் பிரதமரால் கூட்டப்படும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம்போன்று, வட மாகாணத்திலும் மாவட்டங்களில் கூட்டம் நடத்துவது பயனுள்ளதாயிருக்கும்.

2.வடக்கு மாகாணத்தில் வேலையற்றோர், நாளாந்தத் தொழிலாளர், வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்கள், போரின் காரணமாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பொதுவாக வாழ்வாதாரமற்றவர்கள், ஊட்டச்சத்தற்ற குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார் முதலானதொகுதியினருக்கு உணவோ, உணவைப் பெற உதவிகளோ வழங்கப்படாமை தொடர்பில் நடவடிக்கைவேண்டும்.

3. கடலுணவு மற்றும் வேளாண்மை உற்பத்திகள் சுகாதாரம் பேணல், விற்பனைக்கான உறுதிப்பாடு வேண்டும்.

4. யாழ்ப்பாண மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு ஏனைய மாவட்டங்களிலுள்ளவாறு குறைக்கப்பட வேண்டும். அத்தியாவசிய உணவுப்பண்டங்கள் கையிருப்பிலிருக்க வேண்டும்.

(அ) யாழ். மாவட்டத்திற்கு வெளியில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்,திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஏனைய தெற்கு மாவட்டங்களிலும் சாதாரணமாக 1 கிலோ அரிசி ரூபா 84/= க்குத் தாராளமாகக் கிடைக்கிறது.

50 கிலோ அரிசிப் பொதி ரூ4500/= க்கு கிடைக்கின்றது.யாழ்ப்பாணத்தில் அரிசி கிலோ ரூ120/= முதல் ரூ140/= வரை விற்பனை செய்யப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் கிளிநொச்சி, வன்னி மாவட்டங்களில் கிலோ நெல்ரூ35/= க்கு கொள்வனவு செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அரசினால் ரூ50/=க்குக் கொள்வனவு செய்யப்பட்டது.யாழ்.மாவட்டத்தில் நெல் கையிருப்பில் குறைந்துவிட்டது. யாழ். மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களுடன் பார்க்கும்போது 1 கிலோ அரிசிக்குரூ30/= முதல் ரூ50/= வரை மேலதிகமாக பணம் வேண்டியுள்ளது.

ஏனைய அத்தியாவசியப் பண்டங்களுக்கும் விலை அதிகரித்துள்ளது. சாதாரண மக்களிடம் உணவுப் பொருள் வாங்கும் சக்தி முற்றாகவே இல்லை. பொருட்கள் இவர்களால் வாங்குவதும் இலகுவானதல்ல.

5(அ) இந் நிலமைகளைக் கருத்திற் கொண்டு முதலாவதாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பயன்பாடு உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு போதிய நிதி வசதி வழங்கப்பட வேண்டும்.

நெல் கொள்வனவு செய்வதற்கும் அரிசி விற்பனை செய்வதற்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். நாவற்குழி களஞ்சியம் போல் மேலும் களஞ்சியங்கள் நிறுவப்பட வேண்டும்.

(ஆ)நெல் சந்தைப்படுத்தும் சபையில் மாவட்டந்தோறும் கையிலிருப்பிலிருக்கும் நெல் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கையிருப்பிலிருக்கும் நெல்லை இறுதியில் வழங்கலாம். அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் அரிசி, மா, சீனி போன்றவற்றை வவுனியா, அநுராதபுரம், பொலனறுவை, கிழக்கு மாவட்டங்கள் வரை யாழ்.கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்யலாம்.

(இ) அத்தியாவசியக் பொருட்கள் கொள்வனவு, விற்பனைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

(ஈ) கூட்டுறவுச் சங்கங்களுக்கு நெல் விற்பனை செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபைகளிடம் உத்தரவு கொடுக்க வேண்டும்.

(உ) கொரோனா வைரஸ் காலம் முடியும் வரை கூட்டுறவுச் சங்கங்களுக்கு விற்பனை வரி நீக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் பெற்ற கடனை தவணையாகத் திருப்பிச் செலுத்தலாம்.

(ஊ) யாழ். மாவட்டத்தில் வடபகுதியில் அரிசி குத்தும் ஆலைகள் கூட்டுறவுச் சங்கங்களிடம் சிலவே உள்ளன. நவீன பொறிமுறையுடனான நெல், அரிசி குத்தும் ஆலைகள் மாவட்டத்தில் நிறுவ நடவடிக்கை எடுப்பதும் அவசியம். இவ்விடயத்தில் மத்திய அரசு மாகாணத்துக்கு நிதியும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

போர்க்காலத்தில் கூட்டுறவுச் சங்கங்களும் ஊழியர்களும் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் போர்க்காலத்தில் சம்பளம் இல்லாமலே அர்ப்பணிப்புடன் சிறப்பாகச் செயல்பட்டன.

(எ) இந் நடவடிக்கைகளுக்காக ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட மாகாண நிர்வாகம், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மருத்துவ மற்றும் அத்தியாவசியத்துறைப் பிரதிநிதிகள் உள்ளடக்கிய நிர்வாகப் பொறிமுறை நிறுவப்படுவது தேவையாகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.