மே இறுதி வாரத்தில் பொதுத் தேர்தல்?

Report Print Steephen Steephen in அரசியல்
225Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஏப்ரல் 30 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களில் அதாவது 15ஆவது நாளில் தேர்தலை நடத்த முடியும் என்ற காரணத்தினாலேயே தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஒத்திவைத்ததாகவும் தேர்தல் நடைபெற வேண்டிய திகதியை முடிவு செய்யும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கே இருப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்துவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமையவே ஜனாதிபதியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், தேர்தலை நடத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக ஏப்ரல் 19ஆம் திகதியின் பின்னர் இலங்கை கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்க பொதுஜன பெரமுன அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவரின் இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதேவேளை கடந்த மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பியிருந்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, பொதுத் தேர்தல் மே மாத இறுதி வாரத்தில் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு தயாராக ஆணைக்குழுவிற்கு 5 வாரங்கள் தேவை என்பதால், ஏப்ரல் 20ஆம் திகதிக்குள் கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து முற்றிலும் நாட்டில் இருந்து நீங்கியிருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் காணப்பட்ட நிலைமைக்கு அமைய அப்படியான நிலைமையை எண்ணிப்பார்க்க முடியாது என்பதால், பொதுத் தேர்தலை மே மாத இறுதியில் நடத்த முடியாமல் போகும் எனவும் மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் புதிதாக எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் இலங்கை கொரோனா வைரஸ் ஆபத்து இல்லாத நாடு என அறிவிக்கப்பட்டால், தேர்தல் ஆணைக்குழு கட்டாயம் மே மாத இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

கொரோனா வைரசுக்கு எதிராக உலகில் முதல் செயலணிக்குழுவை நியமித்ததும், சிறந்த வேலைத்திட்டதை உருவாக்கியதும் தானே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளரான பந்துல குணவர்தன, தமது அரசாங்கத்தை போன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் மக்களுக்காக நடவடிக்கை எடுத்த அரசாங்கம் உலகில் எங்கும் இல்லை எனவும் உலகில் ஏனைய நாடுகள் காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றியதுடன் ஏனையவர்களை இறக்க செய்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த மற்றுமொரு இணை அமைச்சரவைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரன, இரண்டு வார காலத்திற்கு கொரோனா ஆபத்து முற்றாக நீங்கி விடும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்களை அடிப்படையாக கொண்டு குறுகிய காலத்தில் குறைந்த சேதத்துடன் கொரோனா வைரஸை ஒழித்த ஒரே அரசாங்கம் தமது அரசாங்கம் எனக் கூறி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க ஆளும் கட்சியினர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.