மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் வெளியுறவு அமைச்சு நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய கிழக்கில் கொரோனவைரஸ் தொற்று காரணமாக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில் வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதன்படி ஏற்கனவே தம்மை தொழிலாளர் நலன்புரி நிதியத்தில் பதிவு செய்துக்கொண்டுள்ள இலங்கையின் பணியாளர்களுக்கு நலன்புரி செயற்பாடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பதிவுக்கு அப்பால் மத்தியகிழக்கில் உள்ள 16 தூதரகங்களில் தம்மை பதிவுச்செய்துள்ள இலங்கைப் பணியாளர்களுக்கும் இந்த உதவிகள் கிடைக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நிவாரணங்களை மத்திய கிழக்கில் உள்ள இலங்கையின் பணியாளர்களுக்கு வழங்க அந்த நாடுகளில் செயற்படும் இலங்கையின் சங்கங்கள் மற்றும் மத நிறுவனங்கள் உட்பட்ட வகையில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பனவற்றின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இலங்கைக்கு திரும்பமுடியாமல் இருப்போரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த உதவிகள் அமையவுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தம்மை பதிவுசெய்துக்கொள்ளுமாறு இலங்கையின் வெளியுறவு அமைச்சு கோரிய நிலையில் மத்திய கிழக்கில் உள்ள 21ஆயிரத்து 575இலங்கை பணியாளர்கள் தம்மை நேற்று வரை பதிவுசெய்துக்கொண்டுள்ளனர்.