பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் மகாசங்கத்தினரின் கருத்து

Report Print Ajith Ajith in அரசியல்

பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை ஆபத்தில் தள்ள வேண்டாம், அத்துடன் அரசியல் அமைப்புக்கு அப்பால் சென்று எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்று மகா சங்கத்தினர் கோரியுள்ளனர்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ள நடவடிக்கைகளை மகா சங்கத்தினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராட்டினர்.

அத்துடன் பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதில்லை என்ற தீர்மானத்தையும் மகா சங்கத்தினர் ஏகமனதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப்பிரச்சனைக்கு முன்னைய அரசாங்கம் காரணம் என்று இந்த கூட்டத்தின் போது கருத்துரைத்த நியன்கொட விஜிதஸ்ரீ தேரர் குற்றம் சுமத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலத்துக்கு சிறப்பை தரும் என்று அமரபுர மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமக்கு கிடைத்த பாரிய வெற்றியின் மூலம் புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஆணை இருக்கின்ற போதும் பழைய நாடாளுமன்றத்தை கூட்ட அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மகாசங்கத்தினரை சந்தித்து நாட்டின் நிலை குறித்து கலந்துரையாட தாம் எதிர்பார்ப்பதாகவும் கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.