எதிர்ப்புரட்சிகர வளர்ச்சியடைந்திருக்கும் தமிழ்த்தலைமைகள்

Report Print Gokulan Gokulan in அரசியல்
512Shares

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஈழத்தமிழினத்தை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. எங்கு நாம் நிறுத்தப்பட்டோமோ அங்கிருந்துதான் அடுத்தகட்ட போராட்டப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும். ஆயுதப் போராட்டம் எதனை எம்மிடம் இறுதியாகத் தந்திருக்கிறதோ, அதனை வைத்துக்கொண்டுதான் அடுத்தகட்ட வரலாற்றுப்பயணத்தை எம்மால் தொடர முடியும் என கட்டுரையாளர் தி.திபாகரன் (MA) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒரு நூற்றாண்டுகால இலங்கை அரசியல் போக்கும், இந்துமா சமுத்திர பிராந்திய அரசியல், பொருளியல் போக்கும், உலகளாவிய அரசியலொழுங்கிலும், தமிழர் தாயகம் தவிர்க்க முடியாத கேந்திரப்புள்ளியாய் அமைந்து கிடக்கையில், இதன் காத்திடமான பெறுமதியை உணர்ந்திராத தமிழ்த்தலைமைகள் தம்மனம் போன போக்கில் செயற்பட்டு தன்னின உண்ணிகளாக விகாரமடைந்து காணப்படுகின்றனர்.

எத்தகைய அசாகாய சூரனாலும் எல்லாவிடத்திலும் தனித்து நின்று எதனையும் சாதித்திட முடியாது. சனத்திரள் அரசியலைக்கொண்டுதான் எதனையும் சாதித்திடமுடியும். இருக்கின்ற வரலாற்று வாய்ப்புக்களிலிருந்துதான் அத்தகைய சாதனைகளையும் படைத்திடமுடியும். வெறும் உணர்ச்சிகளுக்கும், மனோவேகத்திற்கும், காழ்ப்புணர்ச்சிகளுக்குமேற்ப எதனையும் படைத்திடமுடியாது.

இந்த அறிவார்ந்த உண்மையை அறிந்திராமல் இருப்பது தமிழ்த்தலைமைகளின் அரசறிவியல் வறுமையே. இந்தவகையிற்தான் கடந்தவாரம் தமிழ்த்தலைமைகள் என்று சொல்லப்படுகின்ற கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் திரு.எம்.ஏ.சுமந்திரனின் சிங்களத் தொலைக்காட்சி உரையாடல் அமைந்துள்ளது.

ஈழத்தமிழினத்தின் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான நீண்ட போராட்டத்தில் தன் கொள்ளவுக்கு மிஞ்சிய ஆளணி, பொருளியல் இழப்புக்களைச் சந்தித்து ஒரு பெரும் தோல்விக்குப்பின் அரசியல் வெளியில் தேக்கநிலை காணப்படும் சூழலில் நீறுபூத்த நெருப்பாக விடுதலைக்கனவு வியாபித்திருக்கும் எம் சமூகத்தின் மக்கள் பிரதிநிதியானவன் அச்சமூகம் விரும்புகின்ற செந்நெறிக்கு ஏற்ப செல்லாமல் முரண்நிலையில் பயணிப்பதென்பது மிக ஆபத்தானது.

ஈழப்போராட்டத்தில் இனப்படுகொலை ரணகளநினைவுகளை நினைவுகூரும் இத்தருணத்தில் இத்தகைய முரண்பேச்சுக்கள் தமிழ் மக்களை சீற்றத்துக்கு உள்ளாக்கும். ஒரு செயலின் உட்பொருளை அச்சசெயல் தரவல்ல விளைவுகளிலிருந்துதான் நாம் அடையாளம் காணவேண்டும்.

நிலைமாறுகால இன்றைய தமிழர் தாயக அரசியலில் முன்னணிவகிக்கும் தலைவர்கள் புரட்சிகரமானவர்களாயின் முன்னோக்கிய பாதையில் பயணிக்கலாம். ஆனால் எதிர்ப்புரட்சிகரமானவர்களாயின் தேசிய அபிலாசை என்பது பின்னோக்கிப் பயணிக்கும். இத்தகைய பின்னோக்கிப் பயணிப்பவர்களாக சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் செயற்படுவதனால் தமிழினம் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தம்மை முன்னோக்கி நகர்த்த அதிகவிலை கொடுக்கவேண்டியிருக்கும்.

அத்தகைய அதிகவிலை கொடுத்து முன்னேறுவதற்கு காலமும், எதிரியும் நமக்கு இடந்தரப்போவதில்லை என்பதை தமிழினம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

தமிழினம் தன்னுள்ளே தேசிய நிர்மானிப்புக்களை கட்டித்தகவமைத்து சர்வதேச உறவுகளுக்குள் தன்னை வளப்படுத்தி இப்புவிசார், பூகோள அரசியலில் ஸ்தாபிதம் செய்வதற்கு இலட்சியமும், திடசிற்பமும் வாய்ந்த உறுதியான தலைமை ஒன்று தமிழர்களுக்கு தேவைப்படுகிறது.

இத்தகைய தலைமைத்துவப் பண்புடைய யாரையும் தமிழர் தரப்பில் காணமுடியவில்லை. மாறாக இன்றைய தமிழ்த்தலைவர்கள் தமிழர்களைப் படுகுழிநோக்கி ஓட்டிச்செல்வதாகவே நடப்பு நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

சிங்களத் தலைவர்களுக்கு சாத்தானிடம் புத்திகேட்டு அந்தப்புத்தியின் எதிர்த்திசையில் பயணித்து தம்மிலக்கை அடையும் வல்லமையுண்டு. ஒன்றின் உட்பொருளைக்காணவும், அதுசார்ந்து தத்துவார்த்த விசாரணை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு நுண்மான் நுழைபுலமுண்டு.

ஆனால் தமிழ் கட்டாக்காலித்தலைவர்களோ இவை எதுவுமறியாமல் விட்டில் பூச்சிகளைப்போல எரியும் சிங்களத்தலைமைகள் என்ற விளக்கைநோக்கிப் பறந்துசென்று தாமும் வீழ்ந்து, தமிழ்மக்களையும் சுட்டெரிக்கும் ஈனச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சட்டத்தரணி அரசியல்வாதிகள் எனப்படுவோர் அறிவார்ந்த அரசறிவியல் மாற்றத்திற்கு உட்படுத்தபட வேண்டியவர்களாவர்.

இத்தகைய தன்னினவுண்ணி அரசியல்வாதிகள் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்றைத்தமக்கு வழிகாட்டியாக ஏற்கவேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இவர்களுக்கு பதவிப்பிச்சை போட்ட ஆயுதப்போராட்டத்தை நினைவிற்கொள்ள வேண்டும். 'பீரங்கியின் குழலின் வாயிலிருந்துதான் அரசியல் பிறக்கிறது" என்பதை இவர்கள் யாரிடமாவது கேட்டறியவேண்டும். 'பிரபாகரனின் ஆயுதப்போராட்டத்தை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்" என திரு.சுமந்திரன் பேசுவது எத்தகைய அபத்தம்.

தமிழர் தேசிய அபிலாசைகளுக்காக களமாடிவீழ்ந்த 40,000 இற்கும் மேற்பட்ட எம்வீரர்கள் மீதும் இப்போராட்டத்தின்பால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரைலட்சம் உறவுகளின் சாம்பல் மேட்டில் ஏறிநின்று இப்படிப் பேசுவதற்கு இந்த மனிதனால் எப்படி முடிகிறது. இப்படிப் பேசுவதற்கு மனித உள்ளம் படைத்த எவனாலும் முடியாது.

பதவியாசை என்பது அடிப்படை மனிததர்மத்தை ஒருபோதும் பேணாது என்பதை இவர்களுடைய செயல்கள் நிரூபித்துநிற்கிறது.

இந்த ஈனச்செயலை மறுத்து 'என்னை இந்தப் போராட்டம் அரசியலுக்குள் கொண்டுவரவில்லை" என சுமந்திரனின் வக்கீல் மூளை ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால் போராட்டத்தின் சாம்பல் மேட்டில் முளைத்த நச்சுவிதைகள் இப்படித்தான் பேசும். வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாததைத் தவிர தெரியாதது ஒன்றுமில்லை என்பதுதான் நிச்சயமானது.

கூட்டமைப்பு உருவான கதையை ஒருமுறை எண்ணிப்பாருங்கள். அன்றையநாளில் கிளிநொச்சி மண்டபமொன்றில் தேசியத்தலைவரின் வலதுபுறம் மாவையும், இடதுபுறம் யோசப் பரராசசிங்கமும் எதிர் ஆசனங்களில் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் குந்தியிருந்ததை எண்ணிப்பாருங்கள்.

பின்நாட்களில் தமிழ்ச்செல்வனின் பின்னே கோவைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிய சம்பந்தரய்யா உங்களுக்கு அதுவெல்லாம் நினைவிருக்கிறதா?.

நீங்கள் யாவரும் கதிரையாசையுடன் அங்கே குந்தியிருந்தவேளை தமிழர் தரப்பில் உங்கள் எவர்மீதும் எந்த நல்அபிமானமும் மக்களுக்கு இருக்கவேயில்லை. வன்னியின் அரசறிவியல் அறிஞர்களும், கருத்துருவாக்கிகளும், யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் 'இந்த பழைய மிதவாதத் தலைவர்கள் யாரும் வேண்டாம் பாராளுமன்ற அரசியலுக்கு முக்கிய அரசியற்துறைப் போராளிகளை அனுப்புங்கள். இல்லையேல் சமூகப் பெறுமானம்மிக்க சமூக முன்னோடிகளை அனுப்புங்கள்" என மிக ஆக்ரோசமாக அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் வாதிட்டனர்.

இதனை தேசியத்தலைவரின் கவனத்திற்கும் கொண்டுசென்றனர். ஆனால் அந்த மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு ஏற்றவகையில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கப்பட வேண்டிய அன்றைய கால சூழமைவை அவர்களுக்குப் புரியவைத்து உங்களுக்கு இந்தக்கதிரைகளை பரிசளித்த தலைவன் எத்தகையவன்.

தேசியப் பேரெழுச்சியுடன் தனது மக்களின் பண்பாட்டையும், சனநாயகத்தையும், வாழ்க்கை முறையையும், அறிவியலையும், சமூக சமத்துவத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருங்கிணைத்து பாதுகாத்து சமூகத்தின் உள்ளும், புறமும் உள்ள அனைத்துவகை ஆதிக்கத்திலிருந்தும் மக்களை விடுவித்து ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையில் ஒரு தேசியத் திரட்சியாய் முன்னெடுக்க வல்லவராக அன்று தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இருந்தார். இத்தகைய முன்னுதாரணமான தலைவனைக் கண்முன்னே கண்டபின்பும் இன்று நீங்கள் ஈனர்களாகிப் போயிருப்பதனை என்னவென்று சொல்ல.

உங்களனைவரையும் தலைவர்களாக இந்த மக்கள் ஏற்றது அந்த தேசியத்தலைவனின் சுட்டுவிரலின் அசைவில் தான். இல்லையேல் நீங்களனைவரும் ஆனந்தசங்கரிகளே. மன்னிக்க!.

ஆனந்தசங்கரியார் கூட உங்களிலும் மேலானவர். ஏனெனில் முள்ளிவாய்காலில் யுத்தமிறுகி மக்கள் கொல்லப்பட்டபோது பாராளுமன்றத்தில் மிகத்துணிவுடனும், தமிழ்ப்பற்றுடனும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மூன்றுலட்சம் தமிழ்மக்கள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றவேண்டும் என்று கர்ச்சித்ததோடு உலகச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியும் வழங்கினார்.

அவர் செய்ததில் ஒரு துளிகூடவாவது நீங்கள் இந்த தமிழ் மக்களின்பாற் பரிவுடன் செய்ததுண்டா. இது எத்தகைய ஈனத்தனம்.

போர்க்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேசுவதற்கு முன்னாள் போராளிகள் சம்பந்தன் அய்யாவைப் பார்க்கச் சென்றபோது அய்யா நீங்கள் நடந்து கொண்ட அநாகரிகத்தை எப்படிச் சொல்ல.

நீங்கள் கிளி. சமாதானச் செயலகம் செல்லும் போதெல்லாம் அங்கு நிகழ்ந்தவற்றை சற்று எண்ணிப்பாருங்கள். நீங்கள் மனிதனாக வாழ்கிறீர்களா என சுயபரிசீலணை செய்யுங்கள்.

காணாமல்போன பிள்ளையின்தாய் சிங்களத்தலைவனின் காலில் விழுந்து கதறியபோது நீங்கள் யாவரும் கல்மனதுடன் கல்லுப்பிள்ளையார்போல் குந்தியிருந்தீர்கள். அந்தத்தாயை தூக்கி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறியிருந்தால் உங்களை மனிதராகக் கூடக் கணித்திருக்கலாம். நீங்கள் அந்த நிலையை இழந்து வெகு காலமாகிவிட்டது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் ஈழத்தமிழர்களுக்கு பேரழிவையும், பெருவலியையும் தந்தது. ஆனால் அது தமிழர் அரசியலுக்கு இனப்படுகொலை என்ற ஒரு வரத்தையும் தந்தது. அந்த வரத்தைக் கொண்டு சர்வதேச அரசியலில் முதலீடாக்கி எங்கள் தேசத்தை நிர்மானித்திருக்க முடியும். ஆனால் அந்த வரத்தை தன்னின உண்ணிகளான கூட்டமைப்பு சிங்களப் பேரினவாதத்திடமே விற்று உங்கள் பணப்பெட்டிகளை நிரப்பிக்கொண்டுவிட்டீர்கள்.

உங்கள் அறிவாற்றலின் எல்லை எதிரியிடம் விலைபோவது வரைதான். ஆனால் உங்களுக்குள் இருக்கும் சுமந்திரன் அதற்கு மேலும், மேலும் பலபடிகள் முன்னேறி எம்மினத்தை விற்றும், மாண்டவர் சாம்பல் மேட்டின் மேலேறிக் கடந்தும், இலங்கைக்கு வெளியே ஆசியாவுக்கும் வெளியே உலக அமையத்தின் மனிதஉரிமையாளர் உயர்பதவிக்காக ஆடும் நாடகங்கள் பல. அந்த நாடகஅரங்கத்தின் ஒரு பகுதிதான் சிங்கள ஊடகத்திற்கான கடந்தவாரப் பேட்டி அமைந்திருப்பதை ஊகிக்கமுடிகிறது.

ஜநா மனிதஉரிமையாளர் என்ற உயர்பதவியை நோக்கி இந்தக் கழுகார் உயரப்பறந்து செல்லத்தான் துடிக்கிறார். அன்று சுமந்திரன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 'போர்க்குற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது" என்றார்.

இந்தப் பொய்க்குப்பின்னும் சுமந்திரனின் வாய்வீச்சுக்கு பயப்படும் ஒரு கூட்டமும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளை அதைக்காவி ஆகா, ஓகோ எனப்புழுகும் ஒட்டுண்ணிக்கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

பேரினவாதத்தின் அனுசரணையுடனான எதேச்சையதிகாரப் போக்கில் மேடைகளிலே வட்டத்தைக்கீறிச் சதுரமென்றும், சதுரத்தைக் கீறி வட்டமென்றும் உரத்து உளறவல்ல வக்கீல் அரசியற்கோமாளிகளை வரலாறு அவ்வப்போது வெளிக்காட்டியிருக்கிறது.

இந்தப்புழுகு மூட்டைக் கோமாளிகள் தம் சுயநலநிமித்தம் தற்காலிக சுகங்களை அனுபவித்தாலும் வரலாற்றன்னையின்முன் அழிவுக்கென்றே தோன்றிய பாவமூட்டைகள் என்ற இழிநிலையைத்தான் பெறுவர்.

தமிழ்த்தேசிய நலன்களை சர்வதேச பிராந்திய, உலகளாவிய கண்ணோட்டங்களுடன் இணைத்து தோல்வியில் வீழ்ந்து துயருற்றிருக்கும் மக்களின் விமோசனத்திற்காக இதயசுத்தியுடன் சிந்திக்க வேண்டியது அவசியம்.

இத்தகைய சிந்தனையார்வம் கொண்டோரும், சமூகப்பற்றுக் கொண்டோரும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறார்கள். அத்தகையவர்களை ஒன்றுகூட்டி சிறு அணியாக்கினாலே ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறமுடியும். இத்தகையவர்கள் முன்வருவதற்கு மிகப்பெரிய தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பது இன்றைய சுயநல அரசியல்வாதிகளே.

அரசியல் என்பது ஒரு விஞ்ஞானம் எனவே அதனை எழுந்தமானதாகவோ, மனவிருப்பின்பாலோ அணுகமுடியாது. இது பொருளாதாரம் பற்றிய ஒரு விஞ்ஞானமாகும்.

சமூகவியலில் சாத்தியக்கூறுகள் பற்றியும் அவற்றை கையாளும் வகைபற்றிய கலைபற்றியுமாகும். இத்தகைய அரசியலை கையாளும் தலைமைத்துவம் என்பது வேற்றுமையில் ஒற்றுமையை கண்டறிந்து உருவங்கொடுக்கும் பணியாகும்.

ஆனால் தமிழ் அரசியற்தலைமைகள் எனப்படும் கூட்டணியினர் ஒற்றுமையில் வேற்றுமையைக் கண்டு வேற்றுமையைப் பெரிதாக்கி சாத்தியக்கூறுகளைச் சதிக்கூடாரங்களாக்கி அரசியல் விஞ்ஞானத்தை பணம்பண்ணும் வியாபாரமாக்கி ஈழத்தமிழர் அரசியலபிலாசைகளை ஏலங்கூறி விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த வியாபாரிகளின் பின்னே சுயநலப்பட்டதாரிகளும் ஒட்டுண்ணிகளாக தொங்கிக்கொண்டிருக்கும் அவலம் தமிழர் அரசியலில் சீழ்பிடித்த புண்ணாகக் காணப்படுகிறது. மாறாக யானைக்கு புயம்பலம், எலிக்கு வளைபலம் என்பதை சிங்களப்பேரினவாத ஆளும் உயர்குழாம் சரிவர உணர்ந்திருக்கிறது.

கூட்டுச்சேரல், விட்டுக்கொடுத்தல். பின்வாங்கல், காலைவாருதல், கழுத்தறுத்தல், ஓங்கியறைதல் என்பவற்றைத் தருணங்களிற்குப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துப் பிரயோகிப்பதில் சிங்களத்தலைவர்கள் கைதேர்ந்தவர்கள்.

இத்தகைய அரசியல் ராசதந்திர யானைகளின் மீது தமிழ்த்தலைமை என்கின்ற இந்த எலிகள் சுறண்டலாம், சுற்றியோடலாம், முதுகில் பாய்ந்து குதித்துத் தாவலாம் என்பதற்காக இந்த யானைகளை முட்டிமோதலாம், இழுத்து நிறுத்தலாம் என தமிழ்மக்களுக்கு தேர்தல்கள மேடைகளில் பொங்கிமுழங்கலாம்.

ஆனால் அந்த பேரினவாதத்தின் ஒரு மயிர்த்துண்டைக்கூட இவர்கள் அசைக்கப்போவதில்லை. அப்படியொரு மயிர்த்துண்டைப் பெயர்த்தாலும் அதையும் விற்றுக் காசாக்கிவிடுவர்.

இந்த அறிவார்ந்த அரசியல் உண்மையை இவர்கள் ஒருபோதும் கற்றறியப் போவதுமில்லை இவர்களால் தமிழினத்திற்கு விமோசம் என்பது ஒருபோதும் கிடைக்கப்போவதுமில்லை.

தி.திபாகரன்