சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை நகர்த்தக் கூடிய நிலைப்பாட்டில் அரசாங்கம்

Report Print Ashik in அரசியல்

விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு ஏதுவான நிலை எதிர்வரும் காலங்களில் வடக்கு, கிழக்கு எங்கும் நிகழலாம் என தாம் ஊகிப்பதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பில் இருந்து நேற்று மன்னாரிற்கு வந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தார்கள்.

எனக்கு மட்டும் இல்லை எனது குழுவில் உள்ள சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாவீரர் தினம் முடிவடைந்து சுமார் 7 மாதங்களை கடக்கின்றது.

இப்போது இதைப் பற்றி விசாரிப்பதற்கு என்ன அவசியம் இருக்கின்றது என்று தெரியவில்லை. இவ்வாறு தான் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டது.

2016ஆம் ஆண்டு நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக நான் கொழும்பிற்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டேன்.

இன்றைய இந்த சூழ்நிலையில் அரசாங்கம் தெற்கில் பௌத்த தேசிய வாத சிங்கள வாக்குகளை தன்னகர்த்திக் கொள்ளும் ஒரு போக்கிற்காகவே வடக்கு, கிழக்கில் இவ்வாறான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மீதும், விடுதலைப் புலிகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் மீதும் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு ஏதுவான நிலை எதிர்வரும் காலங்களில் வடக்கு, கிழக்கு எங்கும் நிகழலாம் என நாங்கள் ஊகிக்கின்றோம்.

அரசாங்கம் சிங்களவர்களை திருப்திப்படுத்தி பௌத்த தேசிய வாதத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல்ஆட்சியை நகர்த்தக் கூடிய ஒரு நிலைப்பாட்டில் ஒரு அங்கமாகவே இதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

சிங்கள மக்களை வடக்கு கிழக்கிலே நெருக்கடி கொடுப்பதன் ஊடாக அந்த நெருக்கடிகளை இந்த அரசாங்கம் சரியாக கையாளுகிறது.

அவர்களுக்கு மிகச்சிறந்த அரசாங்கம் ராஜபக்சவின் அரசாங்கம் என்கின்ற பிரதிபலிப்பிற்காகவே இந்த நகர்வுகளை அரசாங்கம் நன்கு திட்டமிட்டு நகர்த்துவதாகவே நாங்கள் பார்க்க கூடியதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.