கொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதே அன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை

Report Print Yathu in அரசியல்
108Shares

கொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியாக போராடுவதே அன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இராணுவ கெடுபிடிகள் இங்கு அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த இராணுவ கெடுபிடிிகள் அதிகமாக இருக்கின்றது.

இன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருகின்றபோது தடுப்பணைகள் உள்ளிட்ட இராணுவ சோதனைகள் கடுமயாகவே காணப்படுகின்றது. தென்னிலங்கையில் இவ்வாறான கெடுபிடிகள் இல்லாத சூழ்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாத பிரதேசத்தில் இவ்வாறு இராணுவ கெடுபிடிகள் அதிகம் காணப்படுகின்றது.

போக்குவரத்து செய்கின்றவர்கள் பதிவு செய்து செல்லவேண்டிய சூழல் காணப்படுவதுடன், அரசாங்கம் ஒருபடி மேலே சென்று முல்லைத்தீவில் இராணுவத்தினரால் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டுகின்றது.

உங்களிற்கு எத்தனை காணிகள் உள்ளது உளிட்ட அனைத்து விபரங்களையும் திரட்டுகின்றனர். சிவில் நிர்வாகம் ஒன்று இருக்கின்ற நிலையில் அதனை ஒதுக்கி இராணுவம் சிவில் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

சுகாதாரம் தொடர்பிலும் சரி ஏனைய சிவில் நிர்வாகம் செய்யும் வேலைகளை இராணுவ்தினர் மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் அதிகளவில் புகார்கள் கிடைக்கின்றன. தேவைக்கு மேலதிக இராணுவ குவிப்பு மற்றும் சந்திக்கு சந்தியில் விபரங்கள் திரட்டுவது தொடர்பிலும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

கொரோனாவிற்கு எதிராக போராடுவது என்பது அது சுகாதார ரீதியில் போராடுவதேயன்றி துப்பாக்கி கொண்டு போராடுவது அல்ல. ஆனையிறவு தாண்டி இன்று வருகின்றபோது இருமருங்கிலும் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது யுத்தம் காணப்படும் பிரதேசமாகவே காட்டப்படுகின்றது.

இந்த யுத்தமானது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தம். அதனை செய்ய வேண்டியது வைத்திய அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளுமேயன்றி இராணுவத்தினர் அல்ல.

இவற்றை புரிந்துகொண்டு பொது மக்களிற்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு தேவையற்ற இராணுவ பந்தோபஸ்துகளை குறைத்து பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்த வே்ணடும் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளவேண்டி உள்ள நேரத்தில், தேர்தல் எப்பொழுதும் வரலாம் என்ற சூழ்நிலையில் இவ்வளவு தூரமான அடக்குமுறைகளை தமிழ்மக்கள் மீது திணிப்பது தேவையற்ற விடயமாகத்தான் கருதுகின்றோம்.

ஜனாதிபதியும் பிரதமரும் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்தாலும் கூட்ட முடியாது எனவும், அவ்வாறு கூட்டப்பட்டால் உடனடியாக மீண்டும் கலைக்கப்படும் எனவும் அமைச்சரவையில் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் பிரச்சினை என்பது நாட்டிலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அகற்றப்பட்ட நாளிலிருந்து 70 நாட்கள் கால அவகாசம் தந்தால் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் கூறியிருக்கின்றார்.

தேர்தலை நடத்துவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என சுகாதார தரப்பினரும் சொல்கின்றார்கள். அதே சுகாதார துறையினர் சமூக நிகழ்வுகளில் அதிகளவானோர் கூட முடியாது என்ற விடயத்தினையும் கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் நிலவி வருகின்றது. ஆனாலும் ஓர் தேர்தல் ஒன்றை விரைவில் சந்திக்க வேண்டிய சூழலே தென்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.