மைத்திரி போல் அவமானப்படாதீர்- கோட்டாபயவிற்கு அறிவுரை

Report Print Rakesh in அரசியல்

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்."

இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த 2018ம் ஆண்டு 52 நாள் அரசியல் சதிப் புரட்சியின்போது உயர் நீதிமன்றத்துக்குச் சவால் விட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டிருந்தார்.

எனினும், நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் பிரகாரம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீளக்கூட்டப்பட்டது. இதை இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் மனதில்கொண்டு செயற்பட வேண்டும்.

தற்போதைய மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் நாடாளுமன்றத்தை சபாநாயகரால் கூட மீளக்கூட்ட முடியும்.

அதற்குரிய அதிகாரம் தற்போதைய அரசமைப்பில் இருக்கின்றது" - என்றார்.