எதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய!

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்சதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதுவென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளினால் அவருக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் மாத்திரமின்றி அனைவரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஜனாதிபதி நாட்டின் அரசமைப்பை மீறி எதேச்சதிகார வழியில் செயற்பட்டு வருகின்றார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு வரிப் பணத்தை அதிகரித்துள்ளனர். இதனால் சாதாரண மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாய, ரின் மீனுக்கும் பருப்புக்கும் சலுகை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது வரி அதிகரிப்பால் அந்தப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அரசு மக்களுக்குச் சலுகைகளைப் பெற்றுக்கொடுக்கத் தன்னிடம் நிதி இல்லை என்று தெரிவித்துக்கொண்டு நெஞ்சாலைகளை அமைப்பதற்கும், பெருந்தெருக்களைப் புனரமைப்பதற்கும் மற்றும் விளையாட்டு அரங்கு அமைப்பதற்கும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடன் பெறுவது எவ்வாறு என்று சிந்தித்து வருகின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த வேலைத்திட்டங்கள் அவசியம்தானா? தற்போது அரச தரப்பு அமைச்சர்களே ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் இவர்கள் அதனையே பாடுபொருளாய் கொண்டிருப்பார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செயற்பட மாட்டோம்.

நாட்டின் நிதி ஒதுக்கீடுகள் நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறுகின்றதா இல்லை ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் தலையீட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்படாத நிலையிலும் தொடர்ந்தும் நிதி ஒதுக்கீடு செய்வது அரசமைப்புக்கு புறம்பான செயற்பாடாகும். இந்தநிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.