விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பொன்சேகா - கைது செய்யப்படுவாரா?

Report Print Steephen Steephen in அரசியல்

கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டமை சம்பந்தமாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு குற்றவியல் பிரிவு அறிவித்துள்ளது.

மூன்று கொரோனா நோயாளிகள் இறந்து விட்டதாக கடந்த மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறவே பொன்சேகா அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் கொரோனா நோயாளிகள் தொடர்பான கருத்து வெளியிட்டிருந்தமை சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமும் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய செயற்பட்டாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்சவினரின் கடும் கோபத்திற்கு உள்ளான நபராக இருக்கும் சரத் பொன்சேகா இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின் கைது செய்யப்பட்டார். அத்துடன் சுமார் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.