பொதுத்தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜூன் 20ம் திகதியன்று பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுக்களின் விசாரணையை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முற்பகல் 10மணிக்கு இந்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

தொடர்ந்தும் 9வது நாளாக இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதுவரைகாலமும் மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளின் தரப்பில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளன்று சட்டத்தரணி எம்ஏ சுமந்திரன் தமது வாதங்களை முன்வைத்தார். இதன்பின்னர் சட்டத்தரணி சாலியபீரிஸ் உட்பட்ட பலர் தமது வாதங்களை முன்வைத்தனர்.

இந்தநிலையில் பொதுத்தேர்தலை ஜூன் 20ம் திகதியன்று நடத்த வாய்ப்புக்கள் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் மன்றில் அறிவித்தது.

இதனையடுத்து ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று மார்ச் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச்செய்வது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும் தாம் வெளியிட்ட வர்த்தமானியை தாமே ரத்துச்செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டமாஅதிபர் வாதத்தை முன்வைத்தார்.

இந்தநிலையில் கொரோனாவுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதா? அல்லது பிற்போடுவதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.