வெளிநாட்டில் இருந்து தினமும் 285 பேரை மாத்திரமே அழைத்து வர முடியும்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் இருக்கும் தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு அமைய நாள் ஒன்றுக்கு 285 பேரை மாத்திரமே வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர முடியும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் குறித்து பல்வேறு அமைப்புகள் பேசுகின்றன.

இவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருமளவில் பங்களிப்பு வழங்கிய வெளிநாட்டு தொழிலாளர்கள்.

அனைவரையும் அழைத்து வர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அந்த பொறுப்பை நாங்கள் கைவிடவில்லை.

எனினும் நாள் ஒன்றில் 285 பேரை மாத்திரமே அழைத்து வர முடியும். இவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். அந்த மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அழைத்து வர வேண்டும்.

7 முதல் 9 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொடுத்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு வலுவை கொடுத்த எவரையும் மறவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை நன்கு உபசரித்தோம். அவர்களின் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தோம்.

இவை அனைத்தையும் ஒழுங்கு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு நடைமுறைக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஜனாதிபதியும், பிரதமரும் இது குறித்து விசேடமாக கலந்துரையாடி வருகின்றனர். இதன் போது இரண்டு பேரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டனர் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.