ஈஸ்டர் தாக்குதல்: புலன் விசாரணை தொடர்வதாக மஹிந்த தெரிவிப்பு!

Report Print Gokulan Gokulan in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களில் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆழமான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களிலும் நடத்திய தாக்குதல்களில் 250க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்தக் கொடூரத் தாக்குதல்கள் குறித்து அப்போதைய அரசாங்கமும் அதேபோல தற்போதைய மஹிந்த-கோட்டா தலைமையிலான அரசாங்கமும் நடத்துகின்ற விசாரணைகளில் திருப்தி ஏற்படவில்லை என்பதை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பலதடவை கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கண்டிக்கு இன்றைய தினம் முற்பகல் விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீதலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த அவர் நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட சமகால விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியதோடு மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை மற்றும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகி இந்த வருடத்துடன் 50 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் மகாநாயக்க தேரர்களின் விசேட ஆசிர்வாதம் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்களை முடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பிய பிரதமர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களின் விசாரணை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த முழுமையாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலோட்டமாக விசாரணை நடத்தி ஓரிருவரை தண்டிப்பதை விடவும் ஆழமான விசாரணை நடத்தி அதன் விடயங்களை அறிய வேண்டும்.

அண்மையில்கூட முகநூலில் தொலைபேசி இலக்கமொன்றை பதிவிட்டு மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறிய நபரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றோம். நாங்கள் இதன் பின்னாக கண்காணித்து வருகின்றோம்” என்றார்.

இதேவேளை, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பொதுத் தேர்தல் விவகாரம் குறித்து பிரதமர் கருத்து கூறினார்.

“நிச்சயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவும் வேண்டும். தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு இருக்கின்றது.

அது அவர்களுடைய கடமையாகும். வழக்கு விசாரணையின் தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த தயாராக வேண்டும்.

நாங்கள் எதிர்கட்சியாக இருந்தகாலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திவந்தோம். முடிந்தவரை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கே முயற்சித்தோம் அதற்காக தேர்தலை கேட்டோம்.

ஆனால் இன்று தலைகீழாக மாறியுள்ளது. எதிரணியினர் இன்று தேர்தலை வேண்டாம் என்கின்றனர்” எனத் தெரிவித்தார்.