தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சியாக மாறக்கூடாது: அரச தரப்பின் பிரார்த்தனை

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கையில் பலம்வாய்ந்த எதிர்கட்சி ஒன்றுக்கான அவசியப்பாடு எழுந்துள்ள போதிலும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஈடுசெய்துவிடக் கூடாது என்று பிரார்ப்பதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த 06 மாதகாலப் பகுதிக்குள் அரசாங்கம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ததை தவிர வேறு எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முற்றாக நிராகரித்தார்.

கண்டியில் உள்ள தனது இல்லத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல நடத்தியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது உருவெடுத்திருக்கும் நெருக்கடி நிலை குறித்தும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிகாரப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் அக்கட்சி சின்னாபின்னமாக காணப்படுகின்றது. அமரர் டி.எஸ் சோனாநயக்கவினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய விருட்சமாக இருந்த பழைமைவாய்ந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு இன்று பாரிய சவால் ஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரிவினை வாதத்தினால் அதன் ஆதரவாளர்களே பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். அதனால் நாட்டில் இன்று பலம்வாய்ந்த எதிர்கட்சியொன்றுக்கான தேவை எழுந்துள்ளது என்பதே எனது தனிப்பட்ட சிந்தனையாகும்.

ஆனாலும் அந்த வெற்றிடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுசெய்துவிடக்கூடாது. இன்று ஐக்கிய தேசியக் கட்சி அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பதே நிதர்சனம்” என்றார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களை கைது செய்வதைத் தவிர கடந்த 6 மாத ஆட்சிக்காலத்தில் கோட்டா-மஹிந்த அரசாங்கம் வேறு எதனையும் செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டை தாம் அடியோடு நிராகரிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

“கடந்த 06 மாத காலத்தில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்பதை நாங்கள் நிராகரிக்கின்றோம். நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பரில் அமைச்சரவை அமைக்கப்பட்டது.

அதன் பின் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டும் வருகின்றன. இதற்கிடையில்தான் நமது நாட்டை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கும் வைரஸ் பரவி அனைத்தையும் முடக்கியது.

இருப்பினும் தற்போது நாடு வழமைக்குத் திரும்பி வருகின்றது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் ராஜித சேனாரத்ன உள்ளிட்டவர்களை சிறைதள்ளியதால் அரசாங்கத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை.

ராஜித சேனாரத்ன யார்? அவரால் எந்த சவாலும் எமக்கு இல்லை. அவர் இந்த நாட்டில் முதலாவது நபராக நீதிமன்றத்தில் திருடனாக நிரூபிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டவர்” என்று தெரிவித்தார்.