கட்சியில் இணையுமாறு சந்திரிகாவுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி தரப்பு!

Report Print Gokulan Gokulan in அரசியல்

கட்சியிலிருந்து பிரிந்துசென்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ள முடியும் என்கிற அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ளது.

பலரும் பலவிதமான சூழ்ச்சிகளை செய்து சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ, அந்த முயற்சிகள் அனைத்தும் அபத்தமாகவே சென்றதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான மற்றும் பொதுஜன முன்னணியுடன் சுதந்திரக் கட்சியை கூட்டணி வைப்பதற்கான பேச்சுக்களில் தலைமைதாங்கியவருமான பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ கண்டியில் உள்ள தனது இல்லத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

இதன்போது உரையாற்றிய அவர், கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான கட்சியின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தற்போதைய செயற்பாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

வரலாற்றுச் சந்தர்ப்பங்களில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகள் சரியான போதிலும் தற்போது அவர் கொண்டிருக்கும் சிந்தனையை சுதந்திரக் கட்சி நிராகரிக்கின்றது.

குறைந்தது அவரால் அத்தகனல்ல தொகுதியைக் கூட வெற்றிகொள்ள முடியாமற் போனது.

குறிப்பாக அத்தனகல்ல பிரதேச சபைத் தேர்தலிலும் 10 வாக்குகளேனும் சுதந்திரக்கட்சிக்குப் பெற்றுக்கொடுக்க அவரால் இயலாமற்போனது.

அந்த அளவுக்கு அவரை மக்கள் நிராகரித்திருக்கின்றனர். சுதந்திரக் கட்சியை அழிக்க எவராலும் முடியாது. பலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ரோஹண விஜேவீர பல பிரசாரங்களை இறுதியாக நடத்தினார்.

கட்சித் தலைவரை சுட்டுக் கொன்றார்கள். தலைவியை அழிக்க முனைந்தார்கள். கட்சியின் தலைவி மற்றும் அவரது சகோதரரர்கள் வெளியேறி தனிக்கட்சிகளை ஆரம்பித்தார்கள்.

அண்மையில்கூட ஒருபகுதியினர் கட்சியிலிருந்து பிரிந்துசென்று வேறு கட்சியுடன் இணைந்தார்கள். கட்சியிலிருந்து சென்றவர்களுக்கு எமது கட்சி திறந்தே இருக்கும்.

அவர்கள் தத்தமது பிழைகளை உணர்ந்து சரிப்படுத்திக் கொள்ளவும் சந்தர்ப்பம் அளிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இந்த சந்தர்ப்பம் இருக்கின்றது.

2018ம் ஆண்டு அரசியலமைப்பு குழப்பம் ஏற்பட்டு பிரதமராக தற்போதைய பிரதமரை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பின்னர் நாடாளுமன்றத்தில் சுதந்திரக் கட்சியினரே உள்ளனர் என்கிற கடிதத்தை ஜனாதிபதி வழங்கி அவர்களுடைய உறுப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இவ்வாறு அனைத்து வெற்றிகளுக்கும் சுதந்திரக் கட்சியே பின்னணியில் இருந்து வருகின்றது” என்றார்.