சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவோம்! சஜித் திடசங்கற்பம்

Report Print Rakesh in அரசியல்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம். அதற்குத் தலைவணங்குகின்றோம். பொதுத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கின்றோம். சர்வாதிகாரிகளின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட உறுதிபூண்டுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பு, நாடாளுமன்றத் தேர்தல் திகதி (ஜூன் 20) வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ள நிலையில் மேற்படி கருத்தை அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாவின் பாதிப்புக்குள் மக்கள் சிக்கித் தவித்தபோது அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்த்தோம். ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தினோம். எமது இந்த வலியுறுத்தலை அடுத்தே ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டாலும் ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. எனவே, புதிய தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்து நீதியான தேர்தல் நடக்க நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.