இரண்டு ஜனாதிபதி செயலணிகளின் நியமனம் குறித்து மாற்றுக் கொள்கைக்கான நிறுவகம் அதிருப்தி

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி செயலணிகள் இரண்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரத்தில் அமைத்தமை குறித்து மாற்றுக் கொள்கைக்கான நிறுவகம் (CPA) தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பட்டு மூன்று மாதங்கள் சென்றுள்ள நிலையில் சுதந்திரமான தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய மறுத்துள்ளபோது இந்த செயலணிகள் அமைக்கப்பட்டமையானது நியாயமற்றது என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற மேற்பார்வை எதுவும் இல்லை.

இத்தகைய சூழலில், ஜனாதிபதியினால் இரண்டு செயலணிகள் அமைக்கப்பட்டமையானது, இலங்கையில் அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் சர்வாதிகார ஆட்சி மற்றும் இராணுவமயமாக்கலின் சிக்கலான போக்குகளை காட்டுவதாக மாற்றுக்கொள்கைக்கான நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் "நல்லொழுக்கமுள்ள, ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை" உருவாக்க ஜனாதிபதியினால் ஒரு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமை தாங்குகிறார்.

அத்துடன் படைகளின் தலைவர்கள், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் தலைவர்கள், சுங்கத் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கூடுதல் செயலாளர் ஆகியோர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த செயலணிக்கான அதிகாரங்கள் தெளிவற்றதாக இருக்கின்றன. "சமூக விரோத நடவடிக்கைகள்" போன்ற சொற்களுக்கு குறிப்பிட்ட சட்ட அர்த்தம் இல்லை, எனவே இந்த செயலணி எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை குறித்து அச்சம்ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான செயலணி ஒன்றும் வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி செயலணி, வடக்கு கிழக்கு மாகாண பௌத்த துறவிகள், தொல்பொருள் பேராசிரியர், மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர், தொல்லியல் பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் மற்றும் கொழும்பின் ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் ஆகியோரைக் கொண்டுள்ளது.

இதற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமை தாங்குகிறார்.

ஒரு மதத்தின் குருமாரை மாத்திரமே கொண்டமைந்துள்ளமையால் இந்த செயலணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மாற்றுக்கொள்கைக்கான நிறுவகம் தெரிவித்துள்ளது.

இது இன மேலாதிக்க உறுப்பினர்களை கொண்டிருப்பதால், இந்த செயலணி கிழக்கு மாகாணத்தில் வாழும் ஏனைய இன அடையாளங்களை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

"தேர்தல் பிரதிநிதித்துவம், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் தாக்கங்களுடன் புள்ளிவிவரங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த பகுதியில் காலனித்துவமயமாக்கல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் குறித்த செயலணியின் நோக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான தாக்கங்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக மாற்றுக்கொள்கைக்கான நிறுவகம் தெரிவித்துள்ளது.