தாயக கோட்பாட்டுக்கு வந்துள்ள ஆபத்து

Report Print Habil in அரசியல்

நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச பல்வேறு ஊடகங்களுக்கு அண்மையில் செவ்விகளை வழங்கியிருக்கிறார்.

அவரது பல செவ்விகளில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பதில்களையும் அவர் கொடுத்திருக்கிறார்.

இந்தச் செவ்விகளில் இவர் இரண்டு விடயங்களை வலியுறுத்தியிருக்கிறார்.

ஒன்று - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனிநாட்டுக கோரிக்கையை கைவிடவில்லை என்பது.

இன்னொன்று- தமிழ் மக்களின் பிரச்சினையும், தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளும் வெவ்வேறானவை என்பது.

வடக்கு, கிழக்கு இணைப்பைக் கோருவதும் தனிநாட்டுக் கோரிக்கை தான் என்ற புதியதொரு சித்தாந்தமும் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து தனிநாட்டை உருவாக்குவதற்கு, முன்னர் அமைதிவழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு செவ்வியில் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அதற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்றும், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை வேறொரு வடிவில் முன்னெடுப்பதாகவும் அவரது குற்றச்சாட்டு அமைந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும், வடக்கு-கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை முன்வைத்து வருகிறது என்றும், பிரதமர் மகிந்த குறிப்பிட்டிருக்கிறார்.

வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி என்பது தனிநாட்டுக் கோரிக்கை தான் என்பது அவருக்குள்ள புரிதல்.

சமஷ்டியும் தனிநாடும் ஒன்று அல்ல என்று சிங்களத் தலைமைகளுக்கு புரிய வைக்க முயன்று தமிழ்த் தலைவர்கள் எல்லோருமே தோற்றுப் போய் விட்டார்கள்.

இதனை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்த செவ்வியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமஷ்டிக்கும் தனிநாட்டுக்கும் வேறுபாடு தெரியாத அரசியல் தலைவர்களால், இலங்கை ஆளப்படுகிறது என்பது, அரசியல் கோட்பாடுகளுக்கே அவமானத்துக்குரிய விடயம்.

வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டிக் கோரிக்கை தனிநாட்டுக் கோரிக்கை அல்ல என்று இனிமேலும் சிங்களத் தலைவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்று எந்தவொரு தமிழ்த் தலைவரேனும், கருதினால் அது அவர்களின் முட்டாள்தனமே.

ஏனென்றால், சிங்களத் தலைவர்களுக்கு சமஷ்டி, தனிநாடு பற்றிய சொற்களின் அர்த்தமோ, ஆழமோ தெரியாமல் இல்லை. அவர்கள் இந்த இரண்டையும் ஒன்றெனக் கூறி அரசியல் நடத்துகிறார்கள், அது தான் உண்மை.

சமஷ்டியை கொடுத்தால், தனிநாடு உருவாகி விடும் என்ற கற்பனையில் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று நிரூபிக்க முனைகிறார்கள்.

எவ்வாறாயினும், வடக்கு, கிழக்கு இணைப்பைக் கோருவது, தனிநாட்டுக் கோரிக்கை தான் என்ற மகிந்த ராஜபக்சவின் புதிய வாதம், தமிழர்களின் அரசியல் கோரிக்கையை எந்தளவுக்கு பலவீனப்படுத்துவதற்கு அவர்கள் எத்தனிக்கிறார்கள் என்பதை புரிய வைத்திருக்கிறது.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழுகின்ற இரண்டு பகுதிகளை இணைக்கக் கோருவது தனிநாட்டுக் கோரிக்கையாக அர்த்தப்படுத்தப்படுவது அபத்தமான அரசியல்.

வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி என்ற கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடும் வரை, அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக கூற முடியாது என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கும் கருத்து மிக மோசமானது.

அவ்வாறாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தற்போதைய அரசாங்கம் தடை செய்யவும் கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியதை வெறும், அரசியல் குண்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

அந்த நிலை கூட்டமைப்புக்கு மாத்திரமன்றி, ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் கூட வரக் கூடும்.

தமிழ்த் தேசியக கூட்டமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக எப்போதோ அறிவித்து விட்ட நிலையில், அதனை தடை செய்வதற்கு வாய்ப்பில்லை என்று சிவசக்தி அனந்தன், குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்சவின் செவ்வியின் படி, வடக்கு- கிழக்கு இணைக்பைக் கோருவதும் தனிநாட்டுக் கேரிக்கை தான் என்றால், அதனை முன்னிறுத்தும், கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தடை செய்யப்படும் வாய்ப்பு இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1987ஆம் ஆண்டு இலங்கை, இந்திய அரசாங்கங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

1988 ஆம் ஆண்டு தொடக்கம், 2006ஆம் ஆண்டு, அந்த இணைப்பு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, வடக்கும் கிழக்கும் ஒன்றாகவே இணைந்திருந்தன.

உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது சட்டவிரோதம் என்றோ, அது தனிநாட்டு கோரிக்கை என்றோ, பிரிவினைவாதம் என்றோ உயர்நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்ட முறை தான் தவறு என்றே உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

இவற்றுக்கு அப்பால், 1987இல் வடக்கு, கிழக்கு இணைப்பை இந்தியாவே வலியுறுத்தியது. இரண்டு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்படுவதற்கும் இந்தியாவே காரணமாக இருந்தது.

அவ்வாறாயின், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்க இந்தியா ஆதரவு அளித்ததா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றை வழங்க விருப்பம் இல்லாத ஆட்சியாளர்கள், இப்போது வடக்கு- கிழக்கு இணைப்பை தனிநாட்டுக் கோரிக்கையாக உருவகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள்- காலத்துக்குக் காலம், கையாண்டு வரும் உத்திகளில் ஒன்று தான்.

வடக்க- கிழக்கு இணைப்பை கைவிட்டு வருமாறு, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கேட்பதாக, கூறியிருக்கும் மகிந்த ராஜபக்ச, இன்னொரு செவ்வியில் மாறுபட்ட ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அதில் அவர், தமிழ் மக்களின் கோரிக்கைகளும், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளும் ஒன்று அல்ல, வேறுபட்டவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்மக்கள் தனிநாடு கேட்கவில்லை, அதிகாரங்களைக் கேட்கவில்லை, அவர்கள் கேட்பதெல்லாம் அபிவிருத்தியும், பொருளாதார மேம்பாடும் தான் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.

இதே கருத்தை ஏற்கனவே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளே தவிர, தமிழ் மக்களின் கோரிக்கைகள் அல்ல என்று நிறுவுகின்ற முயற்சிகளிலும், இப்போது சிங்கள அரசியல் தலைமைகள் தீவிரம் காட்டுகின்றன.

ஆனால், அவ்வாறான நிறுவல் முயற்சிகளில் அவர்களே தோற்றுப் போகிறார்கள் என்பது தான் வேடிக்கை.

இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அதை விட வேடிக்கை.

அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறிய மகிந்த ராஜபக்ச தான்,

கூட்டமைப்பு முன்வைப்பது தமிழ் மக்களின் கோரிக்கைகள் அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன், வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வை முன்வைத்தே கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அந்த தீர்வை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதால் தானே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்து வந்துள்ளார்கள் என்ற – எளிய தர்க்கத்தைக் கூட, 50 ஆண்டு நாடாளுமன்ற அனுபவம் கொண்ட மகிந்த ராஜபக்சவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தமக்கு தேவையற்ற ஒன்றைக் கோரும் கட்சிக்கு, தமிழ் மக்கள் ஆதரவளிப்பதற்கு எந்த நியாயமும் இல்லையே.

சரி, அவர்கள் பழக்க தோசத்தில் அவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், வடக்கு- கிழக்கை இணைக்க முடியாது, அது தனிநாட்டுக் கோரிக்கை என்று பிரசாரம் செய்து,மகிந்த ராஜபக்சவின் கட்சியால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகி விடத் தான் முடியுமா?

தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க விருப்பில்லாத சிங்களத் தலைவர்கள், காலத்துக்குக் காலம், தனிநாடு, பிரிவினைவாதம் என்றெல்லாம் தமிழர்களை அடக்கி வந்தார்கள்.

இப்போது அவர்கள் வடக்கு - கிழக்கு இணைப்பும் தனிநாட்டுக் கோரிக்கை தான் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

இது தமிழர்களின் தாயக கோட்பாட்டை, அவர்கள் அச்சுறுத்தலானதாக பார்க்கிறார்கள் என்பதை விட, அதனை பலவீனப்படுத்தி முறியடிக்க நினைக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.