ஐயாவுக்கு வந்த கோபம்!

Report Print Habil in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஒரு தொலைக்காட்சி செவ்வியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பதிலளித்திருந்தார்.

அவரைக் கோபம் கொள்ள வைத்த கேள்வி இலங்கையின் தேசியக்கொடி பற்றியது. இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று செவ்வி கண்டவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு இரா.சம்பந்தன் இது பழைய கதை என்று தொடங்கி தான் இலங்கையைச் சேர்ந்தவன் என்ற முறையில் தேசியக்கொடிக்கு மதிப்பளிக்க வேண்டியது தனது கடமை என்று கூறி முடிக்க முயன்றார்.

ஆனால் செவ்வி கண்டவர் விடவில்லை. கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தேசியக்கொடியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்களே என அடுத்த கேள்வியைக் போட்டார்.

அப்போது தான் இரா.சம்பந்தன் உணர்ச்சி வசப்பட்டார். இது தேவையற்ற கேள்வி என்றும் இவ்வாறான கேள்விகளின் மூலம் தான் குழப்பங்களை ஏற்படுத்த முனைகிறீர்கள் என்று கொந்தளித்தார்.

இத்தகைய கேள்விகளால் தமிழ் மக்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தச் செவ்வியின் போது இரா.சம்பந்தன் கோபம் கொண்டதும் அதில் வெளிப்படுத்திய கருத்துக்களும் சில வாரங்களுக்கு முன்னதாக சிங்கள ஊடகமொன்றுக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அளித்திருந்த செவ்வியை நினைவுபடுத்தியது. அந்தச் செவ்வியின் போது ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு சுமந்திரன் அளித்த பதில் அவரை பெரும் சிக்கலுக்குள் மாட்ட வைத்தது.

ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று அவர் அளித்த விளக்கம் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு விட்டது என்பது சுமந்திரன் தரப்பு வாதமாக இருந்தாலும் அவர் அந்தக் கேள்விக்கு சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்பதே தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருந்தது.

ஆயுதப் போராட்டத்தை நிராகரிப்பதில் ஆர்வம் காட்டிய சுமந்திரன் அந்த ஆயுதப் போராட்டத்தில் தமிழர்கள் இறங்க வேண்டிய நிலை எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்று சரியாக புரிய வைத்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் தமிழர்கள் பலரிடம் உள்ளது.

ஏனென்றால் பெரும் அழிவுகளுக்கு காரணமாக இருந்தாலும் சரி தவறுகளுக்கு அப்பாலும் தமிழரின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியதும் அதனை உலக அரங்கிற்கு வெளிக்கொண்டு வந்ததும் ஆயுதப் போராட்டம் தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களினால் பெறப்பட்ட பதவியில் இருப்பவர்கள் அதனை நிராகரிக்கும் போது தமிழர்கள் கோபமடைந்ததில் அர்த்தமும் உள்ளது.

இந்தச் சர்சசையின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடனேயே சுமந்திரனிடம் சிங்கள ஊடவியலாளர் கேள்விகளை எழுப்பினார் என்றும் அதற்கு அவர் சரியான பதிலைக் கொடுத்திருந்தார் என்றும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

ஆயுதப் போராட்டத்தில் தமிழர்கள் இறங்கியதற்கான காரணங்களை விளக்கிக் கூறக்கூடிய ஒரு அரங்கை- சந்தர்ப்பத்தை சுமந்திரன் தவறவிட்டு விட்டார் என்ற தமிழ் மக்களில் பலரினது கருத்துக்கு முரணான வகையிலேயே இரா.சம்பந்தனின் அந்தக் கருத்து அமைந்திருந்தது.

குழப்பத்தை ஏற்படுத்தும் தவறான நோக்குடனேயே சுமந்திரனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன என்ற குற்றச்சாட்டு இரா.சம்பந்தனால் முன்வைக்கப்பட்டது.

அந்தச் செவ்வி தமிழ் அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் தான் அந்த அனுபவத்தை பாடமாக வைத்துக்கொண்டு அண்மைய தமிழ் தொலைக்காட்சி செவ்வியில் பதிலளிக்க முற்பட்டிருந்தார் இரா.சம்பந்தன்.

தேசியக்கொடியை மதிக்கிறீர்களா ஏனைய உறுப்பினர்கள் அதனை நிராகரிக்கிறீர்களே என்று கேள்விகளை எழுப்பியவுடன் அவருக்கு சுமந்திரனிடம் எழுப்பப்பட்ட அதே கேள்விகள் தான் நினைவுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் அவர் இதுபோன்ற கேள்விகளால் குழப்பங்களை ஏற்படுத்த முனைகிறீர்கள் என்று கோபப்பட்டுள்ளார்.

இவ்வாறான கேள்விகளால் தாம் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதை சம்பந்தன் புரிந்து கொண்டிருக்கிறார்.

அதேவேளை அந்தக் கேள்விக்கு தேசியக்கொடியை ஏற்கவில்லை என்று கூறியிருந்தால் சுமந்திரன் அண்மையில் தமிழ் மக்களிடம் சிக்கியது போல சம்பந்தன் சிங்கள மக்களிடம் சிக்கியிருந்திருப்பார்.

அல்லது அதனை ஏற்றுக்கொள்வதாக கூறினால் தமிழ் மக்களால் இப்போது அவர் வறுத்தெடுக்கப்பட்டிருப்பார். இரண்டு தரப்புகளிடம் இருந்தும் தப்பிக்க கையாண்ட வழிதான் அவர் வெளிப்படுத்திய கோபம். இவ்வாறான கேள்விகளால் குழப்பங்களை உருவாக்க முனைகிறீர்கள் என்று அவர் செவ்வி கண்டவரை நோக்கிச் சீறினார்.

இத்தகைய தருணத்தில் இவ்வாறான கேள்விகளால் தமிழ் மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது என்ற சம்பந்தனின் கேள்வியில் உள்ள அர்த்தம் குறைத்து மதிப்பிடக்கூடியதன்று.

இதுபோன்ற உணர்ச்சி வசப்படுத்தும் கேள்விகளாலும் கருத்துக்களாலும் பிரச்சினைகள் மோசமாக்கப்பட்டு வருகின்றன என்பது முற்றிலும் உண்மை.

இரண்டு தரப்புகளிலும் இத்தகைய உணர்ச்சியூட்டும் கருத்துக்க்ளை முன்னிலைப்படுத்தி சர்ச்சைக்கு உள்ளாக்குபவர்களும் அத்தகைய நோக்குடன் செயற்படுகின்ற ஊடகங்களுமே அதிகம் என்பதிலும் சந்தேகமில்லை.

அதேவேளை இரா.சம்பந்தன் கூறுவது போல இத்தகைய கோபமூட்டும் கருத்துக்களால் மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது என்று கூற முடியாது.

இரண்டு தரப்புகளிலும் வெளிப்படுத்தப்படும் சர்சசைக்குரிய கருத்துக்களால் இனப்பிரச்சினைக்கான தீர்வு கைதவறிப் போனதில்லை.

அத்தகைய தீர்வை வழங்கக்கூடிய தலைமைத்துவமும் உறுதியும் சிங்கள மக்களிடம் இல்லாமல் இருப்பது தான் பிரச்சினைக்குரிய விடயம்.

சிங்களத் தலைமைகளுக்கு தமிழர்களுக்கு உரிய நியாயமான தீர்வை வழங்கும் எண்ணமும் இல்லை விருப்பும் இல்லை. அவர்கள் அதனை தட்டிக்கழிக்கவே விரும்புகிறார்கள். இழுத்தடிக்கவே முற்படுகிறார்கள்.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் இல்லை. அதுவும் சிங்கள பௌத்த பூமி தான் என்று அப்பட்டமாக இனவாதம் கக்கும் ஞானசார தேரர் போன்றவர்களுக்கும் வடக்கு கிழக்கை இணைக்கக் கோருவதும் தனிநாட்டுக் கோரிக்கை தான் என்று மற்றொரு வகையில் மிரட்டும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இரண்டு பேரும் ஒரே விசையில் ஒரு திசையில் குண்டுகளை கக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கிக்ள் தான்.

இவ்வாறான தலைமைத்துவங்களால் தான் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமற்றுப் போகிறதே தவிர சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அல்ல.

இதனை இரா.சம்பந்தன் போன்ற தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியம்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சிங்கள மக்களை கோபமூட்டும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையுடன் இருக்கும் இரா.சம்பந்தன் போன்றவர்களைப் போல தமிழர்களை கோபமூட்டாத பொறுப்பு வாய்ந்த எந்தவொரு தலைமையும் சிங்களத் தரப்பில் இருக்கவில்லை என்பதும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகிறது.

இரா.சம்பந்தன் கேள்வியை நிராகரித்தது போன்று எந்தவொரு சிங்களத் தலைவரும் நிராகரித்ததாக கூற முடியாது. இத்தகைபய ஒரு மாபெரும் இடைவெளிக்கு மத்தியில் தான் இரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு நூலிழை தொடர்பை பேண முனைகிறார் இரா.சம்பந்தன்.

ஆயினும் அந்த நூலிழை எந்தளவுக்கு தாங்கு சக்தி கொண்டது என்பது அவருக்கு தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமானது தான்.