குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கருணா! மேல் நீதிமன்றில் வழக்கு தொடரலாம் என்கிறார் லக்ஸ்மன்

Report Print Gokulan Gokulan in அரசியல்
183Shares

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பதால் அவருக்கெதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஆனால் அதனை செய்யாமல் அரசாங்கம் வெறும் கண்துடைப்பிற்காக அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தனது இல்லத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்த விடயத்தில் இனவாத கருத்து அல்ல, படையினரில் 3000 பேரை கொலை செய்ததாக கருணா அம்மான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பகிரங்கமாகவே அவர் ஏற்றுக்கொண்டிருப்பதால் அரசாங்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும்.

இப்போது விசாரணை நடத்த அவசியமில்லை. குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

சட்டத்தரணி என்கிற வகையில் நான் கூறுவது என்னவென்றால், ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னர் விசாரணை எதற்கு? அவரது வாக்குமூலத்தை கொண்டு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி என்கிற வகையில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைய செயற்படத் தயார். இருந்த போதிலும் இன்று நாட்டிலுள்ள தேர்தல்கள் சட்டங்களானது நகைப்புக்கு உரியதாகிவிட்டன.

தேர்தல் சட்டங்களை உருவாக்கும்போது அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி தயாரிக்கும்படி கோரினோம். ஆனால் அதனை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துவிட்டு தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தது.

ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விசேடமாக குறைந்த பட்சம் 100 பேரை கலந்து கொள்ளச் செய்யும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு நாங்கள் உடன்பட முடியாது.

குறைந்தது 500 வரை அதிகரிக்கும்படி கோரிய போதிலும் அதற்கும் ஆணைக்குழு பதிலளிக்கவில்லை. கண்டி மாவட்டத்தில் ஆளுந்தரப்பினரது சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. அதற்கெதிராக இன்னும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சட்டத்திட்டங்களை பக்கச்சார்பாக செயற்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திற்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தெரிவிக்க விரும்புகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.