விக்கியும், சம்பந்தன் ஐயாவும் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டும் : வினோ நோகராதலிங்கம் ஆதங்கம்

Report Print Theesan in அரசியல்
134Shares

விக்கினேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றோர் முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிகொள்ள வேண்டும்.

அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

விடுதலைப் புலிகளாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அது என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரைக்கும் தமிழ் தேசியகூட்டமைப்பை நீங்கள் அழியாமல் பாதுகாத்துவருவதை தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

நாங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கே வாக்களித்து வந்தோம். ஆனால் அவர் கூட்டமைப்பை விட்டுவிலகிச்சென்று ஒற்றுமையை குலைத்தாரோ அன்றே அவருக்கான ஆதரவை நிறுத்திவிட்டோம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டமைப்பிற்கான மாற்று அணி நாங்கள்தான் என்று கூறி கடந்த பிரதேசசபை தேர்தலிலே ஆனந்தசங்கரி ஐயாவுடன் இணைந்துபோட்டியிட்டார்கள்.

எனினும் இப்பகுதியில் நேரடியாக ஒரு உறுப்பினரை கூட வெற்றி பெறவில்லை. அவர்களை மக்கள் நிராகரித்திருந்தமை ஒருபுறம் இருந்தாலும் இன்று அந்த கூட்டு இன்று இல்லை.

இன்று விக்கினேஸ்வரன் ஐயாவின் புதியகூட்டு வந்திருக்கின்றது. அந்தகூட்டும் மாற்றம் தேவை என்று கூறுகின்றது. எல்லோரும் ஐயாக்கள் தான். வயது முதிர்ந்தவர்கள். வீட்டிலே இருந்து ஓய்வு எடுக்க வேண்டியவர்கள். புதிதாக வந்து அரசியல் செய்கின்றார்கள்.

அவர்களை வீட்டுக்கு நிர்பந்தமாக அனுப்ப வேண்டியது உங்களது கடமை. எங்களது சம்பந்தன் ஐயாவும் அரசியல் அரங்கிலே இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

முதுமை காரணமாக அரசியலிலிருந்து தாங்களாகவே ஒதுங்கி கொள்ளவேண்டும். அவர்களாக ஒதுங்கவில்லை என்றால் அவர்களை ஒதுக்கவேண்டிய பொறுப்பு மற்றும் கடமை உங்களிடம் இருக்கின்றது. சம்பந்தன் ஐயாவின் அனுபவத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும். பயன்படுத்தவேண்டும்.

அதில் மாற்று கருத்து இல்லை. அதுபோல கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகின்றவர்கள் துடிப்புள்ள அறிவுள்ள வல்லமையும் ஆற்றலும் கொண்டிருக்கவேண்டும் என்பது உங்களது கருத்தாக இருக்கின்றது.

ஆகவே சம்பந்தன் ஐயா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகின்ற பொறுப்பை நாங்கள் விடுவிக்கவேண்டும்.

அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நாங்கள் பலமாக இருக்கும்போது அதனை செய்வோம். அதே போல விக்கினேஸ்வரன் ஐயா கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படவர்.

ஐந்து வருடமாக மாகாணசபையை படுத்தியபாட்டினை மக்கள் அறிவர். கூட்டமைப்பை உடைப்பது அவரது ஆரம்ப சிந்தனையாக கூட இருந்திருக்கலாம். அதற்காகவே கூட்டமைப்பிற்குள் அவர் வந்தும் இருக்கலாம்.

ஏனெனில் அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது அப்படி தெரிகின்றது.

ஒருகாலத்தில் விக்கினேஸ்வரனை தலைமைதாங்க அழைத்த கஜேந்திரகுமார் இன்று பிரிந்து சென்று தேர்தலில் நிற்கின்றார் என்றால் சிந்தித்துபாருங்கள்.

எனவே கூட்டமைப்பில் இருந்து வெளியேறி சென்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலிலே வெற்றிபெற்ற வரலாறு இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகள் அனைத்தும் தீர்ந்தபின்பு தமிழ்தேசியகூட்டமைப்பு தேவையில்லை. ஆனால் அதுவரைக்கும் கூட்டமைப்பு உயிர்வாழவேண்டும்.

எனவே இந்தகூட்டிலே அனைவரும் இணைந்துகொள்ளுங்கள், மாறாக சிறிய சிறிய நொண்டிச்சாட்டுகளை கூறிக்கொண்டு வெளியில் சென்று வெளியில் விமர்சிப்பதில் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

அத்துடன் கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகளையோ அல்லது விடுதலை போராட்டத்தையோ கொச்சைப்படுத்துபவர்களை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவதற்கும் நாம் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.