கொலைகாரனைப் பாதுகாப்பது ராஜபக்சக்களுக்குப் புதிது அல்ல: சஜித் பதிலடி

Report Print Rakesh in அரசியல்
201Shares

கொலைகாரர்களைப் பாதுகாப்பது ராஜபக்சக்களுக்குப் புதிது அல்ல. அதுதான் கொலைகாரன் கருணாவையும் பாதுகாத்துவரும் ராஜபக்ச அரசு, அவரின் பேச்சையும் நியாயப்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல. அது அனைவருக்கும் தெரிந்ததே. அவரின் சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரங்களுக்குப் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பலம் பெறுவதற்கு ஆயுதம் வழங்கிய நபர் தொடர்பில் கருத்துரைப்பது இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு புறத்தில் இராணுவ ஆட்சியை அரங்கேற்றிவரும் ராஜபக்ச அரசு, மறுபுறத்தில் இராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் துரோகம் இழைத்து வருகின்றது. இது எந்த வகையில் நியாயம்?

இந்த ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சியை அரங்கேற்றுவதும் குற்றம்; இராணுவத்தினரைக் கொத்துக்கொத்தாகக் கொன்றழித்த கொலைகாரனைப் பாதுகாத்து இராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் துரோகம் இழைப்பதும் குற்றம். இந்த இரண்டு வேலைகளையும் ராஜபக்ச அரசு கனகச்சிதமாகச் செய்து வருகின்றது.

ராஜபக்ச அரசு இராணுவத்தினரை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்களைக் கொன்றழித்த கருணா அம்மானை உடன் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.

எமது இந்த வேண்டுகோள் அரசியல் பரப்புரை அல்ல. இதை விளங்காமல் நாட்டின் பிரதமர் கருத்து வெளியிடுவது வெட்கக்கேடாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.