பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும்: சி.பி.ரத்னாயக்க

Report Print Thirumal Thirumal in அரசியல்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா - கலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

அதேபோல் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே கூடுதலான உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றம் செல்வார்கள். அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் நிச்சயம் பெறுவோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது.

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. எனவே, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர்.

அதேவேளை, எம்.சி.சி. விவகாரத்தை நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட அரசாங்கமே கையாண்டது.

அதன்பின்புலம் தொடர்பில் எமக்கு தெரியாது. ஆனால், நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.