நாங்கள் தமிழர்களின் எந்த உரிமைகளையும் யாருக்கும் விற்று விடவில்லை! எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்

Report Print Yathu in அரசியல்

நாங்கள் தமிழர்களின் எந்த உரிமைகளையும் யாருக்கும் விற்று விடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - வட்டக்கச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டம் இருந்த நிலைமையினையும் இன்றுள்ள நிலைமையினையும் அவதானிக்க முடிகின்றது.

யுத்தம் முடிந்து பத்து வருடங்களிலும் இவ்வளவான அபிவிருத்திகளைத்தான் செய்ய முடிந்ததா என்ற கேள்வி எங்கள் முன் வருகின்றது.

நாங்கள் போர் முடிந்த பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது எமது தலையாயக்கடமையாக மக்களின் உரிமைக்காக உழைத்திருக்கின்றோம்.

நாங்கள் எங்கள் உரிமைகளை தென்பகுதிக்கு விற்றுவிட்டோம். எங்களது அடிப்படை அபிலாசைகள் எல்லாவற்றையும் சமரசம் செய்துவிட்டோம் என்றெல்லாம் பலர் பரப்புரைகளைச் செய்கின்றார்கள்.

எங்கள் மக்களினது பிரச்சினைகளை விற்றிருந்தால், அந்த பிரச்சினை தீர்ந்திருக்கும் அல்லது அது தீர்ந்ததாகச்சொல்லப்பட்டிருக்கும். இன்னமும் தீராமல் அது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது என்றால், எந்தத்தீர்வையும் எடுத்துக்கொள்ளவதற்கு தயார் இல்லை என்பது தான் உண்மை.

நாங்கள் பதினொரு வருடங்களாக எங்களது உரிமை பற்றி ஒரே நிலைமைப்பாட்டில் தான் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது உண்மை.

நாங்கள் பல முன்னேற்றங்களைக் கண்டபோதும் அதை இன்னமும் செய்து முடிக்காமைக்கான காரணம் நாங்கள் அவற்றிலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே போகாமல் இருப்பதாகவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்திருக்கின்றோம்.

நாங்கள் தமிழர்களின் எந்த உரிமைகளையும் யாருக்கும் விற்று விடவில்லை. எமது உரிமைகளையும் வடக்கு கிழக்கு இணைந்த பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.