கைது செய்யப்பட வேண்டியவர் கருணா! கைது செய்யப்பட்டவர் சரத் பொன்சேகா..

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஒரே இரவில் 2000 - 3000 வரையான இராணுவத்தினரைக் கொலை செய்ததாக பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒருவருக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் யுத்தக்களத்தில் ஈடுபட்ட சரத் பொன்சேகாவை கைது செய்தமைக்கான நோக்கம் என்ன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய கருணா தெரிவித்திருக்கும் பாரதூரமான கருத்தை அரசாங்கத்தினர் நியாயப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு சில ஊடகங்களும் துணை போகின்றன.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக செயற்பட்ட ஒருவரை காப்பாற்றும் நோக்கில் இவர்கள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன.

கருணா அம்மான் என்பவர் கைது செய்யப்படவேண்டியவரே, ஆனால் சரத் பொன்சேகாவே கைது செய்யப்பட்டார்.

இராணுவ வீரர்கள் நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளை கொலை செய்தோம் என கூறி பெருமைப்படுவதை எங்காவது அவதானித்துள்ளீர்களா?

கருணா அம்மான் இவ்வாறு பெருமை கொள்கின்றார் என்றால் அவர் இன்னமும் பயங்கரவாத எண்ணங்களுடனே இருக்கின்றார் என்பதே அர்த்தம்.

கொலை செய்ததாக குறிப்பிட்டு எவருமே பெருமை கொள்ளமாட்டார்கள். கருணா போன்றோர் வெளியில் இருக்கும் போது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் இராணுவத்தினரும் இன்னமும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கருணா அம்மானின் கருத்தை நியாயப்படுத்தி வரும் ஆளும் தரப்பினர் தங்களுக்கு இருப்பது இராணுவத்தினர் மீதான அக்கறை அல்ல ராஜபக்சக்களின் மீதான அக்கறையே என்பதை காண்பித்துள்ளனர்.

கருணாவை பாதுகாப்பதற்காக அவர்கள் காண்பித்துவரும் அக்கறையின் உச்சக்கட்டமாக கருணாவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுமே தொடர்பை பேணி வந்ததாக கூறி வருகின்றனர்.

கருணாவுக்கு சிக்கல் ஏற்பட்டால் மனவுளைச்சலுக்குள்ளாகும் நபர்களும் ஆளும் தரப்பில் இருக்கக்கூடும் தானே? அவர்கள்தான் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபயவின் வெற்றிக்காக வாக்களித்தவர்கள் இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். செயற்படும் வீரனின் ஆட்சியில் இராணுவத்தினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தினால் எவ்வாறான பாதுகாப்பை கொடுக்கின்றார்கள் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.