இனவாதத்தை பரப்பி வாக்கு பெறலாம் என நினைக்கின்றார்கள்: ரிசாத்

Report Print Theesan in அரசியல்

இனவாதங்களை பரப்புவதனூடாக வாக்குகளை பெறலாம் என்கின்ற கருத்து அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா - சூடுவெந்தபுலவு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இனவாத சிந்தனையை வளர்ப்பதனூடாக ஒரு இனத்தின் அழிவை அல்லது ஒரு இனத்தின் வேதனையை இன்னோர் இனத்துக்கு சொல்லி அதனூடாக வாக்கு சேகரிக்கலாம் என்று கடந்தகால செயற்பாடுகளை நாங்கள் பார்க்கின்றோம்.

ஆனால் இன்று கருணாவோடு இணைந்த அணியினர் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேச்சையும், சிங்கள மக்களிடம் இன்னுமொரு பேச்சையும் பேசுவதை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வோடு உள்ளவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் வெவ்வேறு விதமாக பேசமாட்டார்கள். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமாக பேசமாட்டார்கள்.

ஆகவே நாங்கள் வேண்டிக்கொள்வதெல்லாம் பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும் யதார்த்தத்தை புரிந்து இந்த நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஜனநாயகம் மிளிரக்கூடிய நல்லதொரு ஆட்சிக்காக நல்லதொரு நாடாளுமன்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.

சமூக இடைவெளி அல்லது கொவிட் 19 தடைகள், அழுத்தங்கள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரம்தான் சட்டமாக இருக்கின்றதே தவிர, ஆளும் தரப்புக்கு இது சட்டமல்ல. ஊரடங்கு சட்ட காலத்திலும் அவர்கள் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுத்தார்கள்.

அவர்களுக்கு அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் என எல்லோரும் அவர்களுக்கு பெரிய ஒத்துழைப்பை வழங்குகின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருப்பதால் நாங்கள் மட்டும்தான் இந்த சட்டத்தினை பேண வேண்டும் என அரச தரப்பு மிகவும் கடுமையாக இருக்கின்றது என தெரிவித்தார்.