இந்திய இராணுவத்தின் வருகையை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும்: டக்ளஸ்

Report Print Yathu in அரசியல்

இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய படைகள் இலங்கைக்கு வந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும். அதனை தலைமைகளும், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இன்றும் அரசாங்கங்களாகவே உள்ளது. அவ்வாறு இந்திய படைகள் இலங்கைக்கு வந்தபோது அதனை சரியாக பயன்படுத்தியிருக்க முடியும்.

நாங்கள்தான் எங்கள் பிரச்சினையை அதனுடன் கொண்டு சென்று பொருத்த வேண்டும். சில பிரச்சினைகளை உடனடியாக தீர்த்திருக்கலாம்.

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில்கூட நாங்கள் அதனை தீர்த்திருக்க முடியும்.

தேர்தலில் தெரிவு செய்தவர்களை நீங்கள் தேடி செல்லக்கூடாது. அவர்கள் உங்களிடம் வரவேண்டும். அவ்வாறான நிலையை உருவாக்க வேண்டும்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய இடத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தனது ஆரம்ப கூட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதியில் முன்னர் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவரது கூட்டத்தில் 30 பேர் வரை மாத்திரமே அந்த கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மின்சார கதிரைக்கு அனுப்புவோம் என்றார்கள். சர்வதேச நாடுகளின் மின்சார கதிரைக்கு அனுப்புவோம் என தெரிவித்துவிட்டு ஜனாதிபதியாக அமோக வாக்குகளை பெற்று வந்ததன் பின்னர் அந்த ஆட்சிதான் குறைந்தது 5 வருடங்களிற்கு இருக்கும் என்று தாங்கள் அந்த ஆட்சியாளர்களுடன் பேச தயார் என்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.