நாக்கை அடக்கிவைக்குமாறு கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்தது! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கிவைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும், நான் எனது மக்களுக்கு துரோகம் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“1982 – 1986 வரையில் நான் ஐந்து வருடங்கள் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மல்லாகம் நீதிமன்றம் அருகில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அந்தக் காலகட்டத்தில் எனக்கு வலதுகரமாக இருந்து கடமையாற்றியவர் உங்களில் ஒருவர் தான். அன்றைய பலமுகங்கள் இன்று இங்கில்லை. சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள்.

சிலர் இந்த உலகவாழ்வையே நீத்துவிட்டார்கள். ஆனால் அந்தக் காலம் பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் ஆழ்ந்து பதிந்துள்ளது. அன்று நீதிபதி. மக்களிடம் இருந்துசற்று ஒதுங்கி வாழ்ந்தகாலம். இன்று ஒருஅரசியல்வாதி.

உங்களுடன் ஒருவரோடு ஒருவராக உங்கள் சுகதுக்கங்களில் பங்குகொள்ள வந்துள்ளேன். என்னை இங்கு அழைத்த சகோதரர் ஸ்டார்லின் அவர்களுக்கு எனது முதல் நன்றி உரித்தாகுக.

அவரை அண்மையில்த்தான் நான் சந்திக்கநேர்ந்தது. இவ்வளவு விரைவில் அவர் தம் கை வண்ணத்தைக் காட்டுவார் என்றுநான் எண்ணியிருக்கவில்லை. ஞாயிறுமாலை 6 மணிக்கு குழமங்கால் கூட்டம் என்றவுடன் உண்மையில் மகிழ்வடைந்தேன்.

ஏன் என்றால் ஒன்று ஸ்டார்லின் அவர்களின் ஈடுபாட்டைக்கண்டு அடுத்தது குழமங்கால் செல்லப் போகின்றோமே என்று. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.அடுத்து இன்றைய தேர்தல் கூட்டம் பற்றியஒருவிளக்கம்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சிலவிடயங்களை தெளிவாக புரிந்துகொண்டு வாக்களிக்கவேண்டும் என்று உங்கள் ஊடாக எனது தமிழ் உறவுகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

மக்கள் ஆணையான வட்டுக்கோட்டை தீர்மானத்தை கைவிடுவதாக நாம் அறிவிக்கவில்லை. நாம் அதனால்த் தான் நேற்றைய தினம் எமது அங்குரார்ப்பண தேர்தல் கூட்டத்தை அந்தத் தீர்மானத்தை இயற்றிய இடத்தில் வழக்கம்பரை அம்மன் கோயில் முன்றலில் வைத்தோம்.

அன்று எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் உள்அர்த்தம் 44 வருடங்களுக்குப் பிறகும் உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக நாங்கள் காண்கின்றோம்.

அதனால்த்தான் நாங்கள் வடகிழக்கு இணைப்புசாத்தியம் என்று கூறி எமது தாயகக் கோட்பாட்டை கைவிடாது பற்றி நிற்கின்றோம். சர்வதேச சட்டப்படி நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள் கூட்டம். நாமே இந் நாட்டின் ஆதிக்குடிகள் என்பதைநாம் உரத்துக் கூறிவருகின்றோம்.

அதனால் எம்மை நாமே ஆள எமக்குரித்துண்டு என்பதை தென்னவர்களுக்குக் கூறிவருகின்றோம். அடுத்து நாங்கள் சிலர் போல் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெறவில்லையென்று கூறத்தயாரில்லை.

மாறாக வடமாகாண சபையில் நாம் இயற்றிய இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம்.

மேலும் நல்லாட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறி நாம் ஐ.நா சபையில் இனப்படுகொலையாளிகளை பிணை எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டோம்.

மாறாக அன்றைய அமெரிக்கப் பிரதிநிதி நிஷாபிஸ்வால் இலங்கைக்குக் காலநீட்சியைக் கொடுக்கவேண்டும் என்று எம்மிடம் கூறியபோது அதைவெகுவாகக் கண்டித்தேன்.

அதற்கு மேலும் கூறுவதானால் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான சர்வதேச யுத்தகுற்ற விசாரணையை அரசியல் தீர்வு வரப்போகின்றது என்ற கானல் நீரைக்காட்டிமழுங்கடித்தவர்கள் நாம் அல்லர்.

இவை எல்லாம் இது வரையில் நடைபெற்ற திருகுதாளங்கள். மேலும் உரிமை அரசியல் என்று முழக்கமிட்டு கம்பெரேலிய என்ற சலுகை அரசியலுக்குள் மக்களை நாம் முடக்கவில்லை.

நெல்சன் மண்டேலா என்று சிங்கள இனப்படுகொலையாளிகளை நாம் புகழவில்லை. எம்மை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று ஏமாளிகளாய் உங்கள் முன் வரவில்லை. இவற்றை உங்களுக்குசொல்ல வேண்டியகாலம் கனிந்துள்ளது.

அதனால்த்தான் இவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். வடமாகாணசபையின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்துக்கு அடிபணிந்து நாம் எமது அரசியல் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கிவைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்தபோதும் நான் எனது மக்களுக்கு துரோகம் செய்யவில்லை.

அதனால் தான் என்னை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார்கள். நான் பதவியில் இருந்தபோது, பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால், நான் எதுவும் செய்யவில்லை என்று அப்பட்டமான பொய்களை கூறிவருகின்றார்கள்.

குறிப்பாக, மத்திய அரசாங்கத்தின் நிதியை மீள திரும்ப அனுப்பியதாக கூறி மக்களை நம்பவைக்கப்பார்க்கின்றார்கள். எனது காலத்தில் ஒருசதம் நிதியையும் நான் திரும்ப அனுப்பவில்லை என்பதே உண்மையானது. பலமுறை இதைக் கூறிவிட்டேன்.

ஆனால் தொடர்ந்து எம்மைப் பற்றிபொய்கள் கூறப்பட்டுவருகின்றன. ஒருபொய்யை ஆயிரந் தடவைகள் கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற கணிப்பில் அவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களோ தெரியாது.

பொதுவாக நாம் விமர்சன அரசியல் செய்ய விரும்புவதில்லை. ஆனால் சில விடயங்களை சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. அதனையே நான் செய்தேன்.

எம்மிடம் மாற்று வழிகள் இருக்கின்றன. நாம் என்ன செய்யப்போகின்றோம் என்ற தெளிவான சிந்தனை எம்மிடம் இருக்கின்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தயாரித்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவிருக்கும் சில நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளோம்.

தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி முடிவுகளை எந்த விதமான ஆராய்வுகளும் இன்றி எடுத்து அவற்றைநடை முறைப்படுத்தி வந்ததுதான்.

உலகின் ஆதிக்குடிகளில் ஒன்றான எமது இனத்தின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறு ஓரிரு நபர்கள் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுக்க முடியும்? இது எத்தனை ஆபத்தானது?

ஆகவே, கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள்.

அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் கூட்டாகச் செயற்படுவோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனை கூடம் ஒன்றையும், மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் சமூகமேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்களை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கைஎடுப்போம்.

நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனி விடிவைக் கொண்டுவரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்கு காரணம்.

உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும் என்பதை நாம் உணரவேண்டும். எம்மேல் எமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.

அதேவேளை, எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக நாடாளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம்.

ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமது மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் அவற்றுக்கு நாம் ஒருபோதும் முண்டுகொடுக்கமாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமது மக்களின் நலன்களை முன்வைத்து நாம் பேரப்பேச்சுக்களில் ஈடுபடுவோம்.

உதாரணத்திற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுகோரி வந்தார்கள். சில நிபந்தனைகளை முன்வைத்தேன். தயங்கினார்கள். அப்படியானால் என்னால் உங்களுக்கு ஆதரவுதர முடியாது என்று கூறிவிட்டேன். சென்று விட்டார்கள்.

எமது சிந்தனையில் முதலில் வருவது எமது மக்களின் நலம். எமது எந்தப் பேரம் பேசலும், கருத்துப் பரிமாற்றமும் எம் மக்களின் நலன்களையே முன்வைத்து நிகழும்.

எமது நாடாளுமன்ற பிரவேசம் மூலம் எடுக்கக்கூடிய அத்தனை வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி எமது மக்களை வலுவூட்டச் செய்யும் பொருளாதார நடவடிக்கைகளை நாம் சுயநலம் இன்றி மேற்கொள்வோம்.

அதேவேளை, எவ்வாறு எமது மக்களின் தற்சார்புபொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்பது பற்றி சிந்தித்து வருகின்றோம்.

இதற்கு எவ்வாறு வெளிநாடுகளையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற உத்திகளை ஆராய்ந்து வருகின்றோம்.

யுத்தம் நடைபெற்றகாலத்தில் வடக்கு கிழக்கில் பொருளாதார தன்னிறைவை ஏற்படுத்த பெரிதும் பாடுபட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பாளர் ரூபன் எம்முடன் இணைந்துள்ளார். அவர் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர் முக்கியபங்குவகிப்பார். அவரிடம் மிகுந்த திறமையும் அனுபவமும் இருக்கின்றது. அதேபோல் எமது யாழ்ப்பாண, வன்னி மாவட்ட மற்றும் மட்டக்களப்பு வேட்பாளர்கள் பலதகைமைகளைக் கொண்டவர்கள்.

ஆசிரியர்கள் வங்கியாளர்கள், பொறியியலாளர்கள் என்று பலர் இருக்கின்றார்கள். இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைவெற்றியடைச் செய்வதால் எமது மக்கள் பலத்த பயன் அடைவார்கள் என்பதைக் கூறிவைக்கின்றேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவம் இன்றுகளை இழந்துள்ளதற்குக் காரணம் அவர்களின் சுயநல அரசியல். ஆகவே இம்முறை வீட்டை விட்டுவிட்டு சைக்கிளை விட்டுவிட்டு, வீணையை விட்டுவிட்டுநீ ங்கள் மீனுக்கே வாக்களிக்கவேண்டும்.

மீன் ஆட்சிவர ஆதரவுதர வேண்டும். எமது மக்களின் உரிமைகளை அடைவதற்கான எமது அணுகுமுறை ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் மாறுபட்டு காணப்படுகின்றது என்பதைநீங்கள் உணரவேண்டும்.

மீனுக்கு இம்முறை வாக்களியுங்கள் என்றுகேட்டு என் தலைவருரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.