அரசியல் தலைவர்கள் புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

தற்போது அரசியல் தலைமைத்துவத்தில் இருக்கும் அனைவரும் ஓய்வுபெற்று, புதியவர்கள் பதவிக்கு வருவதற்கு இடமளித்தால், நாட்டை கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது 75 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஹொரவப்பொத்தனை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ என்னை பலவந்தமாக அரசியலுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வந்து 5 வருடங்களுக்கு இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்த நாட்டை கட்டியெழுப்ப மாட்டார்கள் என்பதை புரிந்துக்கொண்டேன். இவர்களில் ஒருவராலும் முடியாது. தான் வளர்வதற்காக கொள்ளையடிக்கும் நோக்கிலேயே பலர் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இப்படியானவர்களுடன் அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை. எனக்கு பேராசையில்லை. ஜனாதிபதியாக பதவி வகித்து வீட்டுக்குச் சென்ற பின்னர், மீண்டும் பிரதமராக பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இல்லை. சர்வாதிகாரங்களை கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகும் தேவை எனக்கில்லை.

தற்போது அரசியலில் இருக்கும் தலைவர்கள் நடக்க முடியாது உடல் நல குறைவுடன் அரசியலில் ஈடுபடுவதை விட ஓய்வுபெற்று வீட்டுக்கு சென்று, புதியவர்களுக்கு இடமளித்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நான் நினைக்கிக்றேன்” என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.