எம்.சீ.சீ நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிதி வழங்கவில்லை! ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

எம்.சீ.சீ. என்ற மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கை சம்பந்தமான பேராசிரியர் லலிதசிறி குணருவான் குழுவின் அறிக்கை மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் எம்.சீ.சீ உடன்படிக்கை சம்பந்தமான இரண்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட பின் அன்றைய அரசாங்கத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக லலிதசிறி குணருவான் குழு தனது அறிக்கையில் கூறியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இந்த நிதி நடவடிக்கை தொடர்பான எவ்வித அறிக்கைகளும் நிதியமைச்சில் இல்லை எனவும் அந்த குழு கூறியிருந்தது.

ஆனால், அமெரிக்காவின் எம்.சீ.சீ. நிகழ்ச்சித் திட்டம் இலங்கை அரசுக்கு எவ்விதமான நிதியையும் விடுவிக்கவில்லை என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது எனவும் நிதி விடுவிக்கப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை ஏமாற்றியதுடன் இம்முறை தேர்தலிலும் இதே செயலில் ஈடுபட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.