எனது அமைச்சு மூலம் இறுதிவரை சம்பளம் பெற்றவரே அனுசா! வே. இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

எனது அமைச்சு மூலம் இறுதிவரை சம்பளம் பெற்றார் அனுசா. அவ்வாறு சம்பளம் பெற்றுவிட்டே இன்று தனித்து செயற்படுகின்றனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை கைப்பற்றப்போவதாக அனுசா சந்திரசேகரன் விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

திருமணத்தின் பின்னர் பெண்ணொருவர், தனது பெயருக்கு பின்னால் கணவரின் பெயரையே பயன்படுத்த வேண்டும். ஆகவே, அனுசா அமேஷ்வரன் என்பவர் எமது கட்சியில் இருந்து வெளியேறும் வரை அமைச்சு ஊடாக சம்பளம் வாங்கினார்.

இப்போது தனித்துசென்று வாக்கு கேட்கின்றார். அது மட்டுமல்ல பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை மீட்கப்போவதாகவும் சூளுரைத்துள்ளனர். தேர்தல் முடியட்டும், அதனை பார்த்துக்கொள்வோம்.

மலையக மக்கள் முன்னணியை நான் பொறுப்பேற்கும் போது அனுசா மாணவியாக இருந்தார். கட்சி முக்கியமெனில் அதனை வைத்திருக்கலாம் தானே?

மலையக மக்கள் முன்னணி இன்று இருக்கின்றதெனில் கட்சி ஆதரவாளர்களே அதற்கு பிரதான காரணம். தலைமைத்துவம் வழங்கவே என்னை அழைத்து வந்தனர்.

சந்திரசேகரனின் கொள்கைகள் சிறந்தவை. நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நானும் வந்தேன். நான் எங்கிருந்தாலும் தலைவர்தான். அந்த கட்சியில் இருந்திருந்தாலும் தலைவராகவே இருந்திருப்பேன்.

மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்த முயற்சிக்கும் வேளை முட்டுக்கட்டைகள் வருகின்றன. அவற்றை கண்டுகொள்ள வேண்டாம். தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து நாம் கவனம் செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.