மகிந்த சரியான தீர்மானம் எடுக்காமல் இருந்திருந்தால் நாம் இன்னும் பிரபாகரனின் அடிமைகள் தான்! ஜோன்ஸ்டன்

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்ச குடும்பம் என்பது நாட்டை பாதுகாக்கும் காவல் தெய்வங்களின் குடும்பம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட முஸ்லிம் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா, இலங்கையில் நடைபெற்ற சிவில் போர் சம்பந்தமான யோசனை ஒன்றை கொண்டு வந்தது. மகிந்த ராஜபக்ச மீது கையை வைக்க வேண்டாம் எனக் கூறி முஸ்லிம்களே அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் பின்னரே எதிர்க்கட்சிகள் சர்வதேசத்தின் உதவியுடன் இனவாதத்தை உருவாக்கியது. முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தாலும் பின்னர் மகிந்த ராஜபக்ச முஸ்லிம் மக்களின் மனதை வென்றெடுத்தார்.

இதனால், மகிந்த ராஜபக்சவின் வெற்றியை தடுக்க வேண்டுமாயின் முஸ்லிம் மக்கள் அல்லது சிங்கள மக்களின் வாக்குகளை உடைக்க வேண்டும் என சர்வதேச சூழ்ச்சியாளர்கள் அறிந்துக்கொண்டனர்.

2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினர். எனினும் தாம் எடுத்த தீர்மானம் தவாறானது என மக்கள் புரிந்துக்கொண்டனர். இதனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது தவறை திருத்திக் கொண்டனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி பாராட்டுவதற்காக கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இதனால், எதிர்க்கட்சிகள் மீண்டும் மகிந்த ராஜபக்சவை பொறாமையுடன் பார்க்கின்றன. தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர் எனக் கூறி இருவருக்கு எதிராகவும் சேறுபூசுகின்றனர். எனினும் இவர்கள் இருவரும் கிடைத்தது நாட்டின் அதிஷ்டம்.

இவ்வாறான நிலைமையில் கொரோனா வைரஸ் பரவியதால், அதிகளவானர்கள் இறந்து போவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்த போதிலும் ஜனாதிபதியின் திட்டங்கள் மற்றும் அனைவரது ஒத்துழைப்பு காரணமாக இந்த தொற்று நோயில் இருந்து நாட்டை பாதுகாக்க அவர் நடவடிக்கை எடுத்தார்.

இந்த ராஜபக்ச குடும்பம் இருந்திருக்காவிட்டால், நானும் நீங்களும் வாழ்வதற்கு நாடு எஞ்சியிருக்காது. அன்று முப்படைத்தளபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச சரியான தீர்மானத்தை எடுக்காமல் இருந்தால், நாம் தற்போதும் பிரபாகரனின் அடிமைகள். ராஜபக்ச குடும்பம் என்பது எமது நாட்டை பாதுகாக்கும் காவல் தெய்வங்கள் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.