ஒரே பேரத்தில் பல சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக மாறிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள்! ஆனந்தசங்கரி

Report Print Gokulan Gokulan in அரசியல்

இராணுவத்தினரதும், புலனாய்வாளர்களினதும் தீவிர கண்காணிப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதால், நீதியான தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை முற்றிலும் உண்மையான வரவேற்கத்தக்க கருத்து என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம், வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாமும் அதே கருத்தைத் தான் கொண்டிருக்கின்றோம் என்ற போதும் இந்த கருத்தினை கூறுவதற்கு சம்பந்தன் தகுதியுள்ளவரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

2004ஆம் ஆண்டு இதே போன்ற, ஒரு சூழ்நிலையில் தான் தேர்தல் நடந்தது. அனைத்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் வடக்கு, கிழக்கில் நீதியான, நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை என்றும், மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தன.

ஆனால் சட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையான ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒரு தலைவராக சம்பந்தன் இருந்திருப்பாரேயானால், ஜனநாயகத்துக்கு விரோதமாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம், சர்வதேச கண்காணிப்பு குழுக்களும் அதனையே உறுதிப்படுத்துகின்றன.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஏற்கமாட்டோம் என, ஒரு தீர்க்கமான முடிவெடுத்திருந்தால், இன்று சம்பந்தனின் கருத்துக்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் செவிமடுக்கும். ஆனால் சம்பந்தன் அவர்கள் 2004ம் ஆண்டே ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர் ஆவார்.

யுத்தம் முடிந்தபின் நடந்த, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும், வெற்றி பெற்று, நாடாளுமன்றம் சென்ற அவர் வடக்கு, கிழக்கில் படை குறைப்பு இடம்பெற வேண்டும், படையினரின் வசமுள்ள சகலகாணிகளும் விடுவிக்கப்பட வேண்டும், இதை அரசு

நடைமுறைப்படுத்தாவிடின் அதன் விபரீதங்கள் எப்படி இருக்குமென்று நாம் சொல்லத்தேவையில்லை என்று இப்போது தேர்தலுக்கான வீராப்பு வசனங்களை பேசுவதைப்போல், அந்த நாடாளுமன்ற அமர்வுகளில் தான் ஒட்டி உறவாடிய அரசாங்கத்தைப் பார்த்து ஏன் கேட்கவில்லை?

10 வருட அவரின் நாடாளுமன்ற வாழ்க்கையில் முதல் 5 வருடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, அடுத்த 5 வருடம் எதிர்கட்சி தலைவராக இருந்து, அவரின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களால் போற்றி பாராட்டப்பட்ட நல்லாட்சி அரசு, இந்த இரண்டு தரப்பினரிடம் அவர் இதுவரை இது பற்றி பேசவில்லையா? அல்லது பதவி போதை தலைக்கேறியதில் மறந்துவிட்டாரா? இந்த இரண்டு தரப்பில் ஒரு தரப்புத் தான் ஆட்சிக்கு வரப்போகிறது. அவ்வாறெனில் இனி எந்த தரப்பினரிடம் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்?

கடந்த நல்லாட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சரத் பொன்சேகா தன்னுடைய குற்றங்களில் இருந்து விடுதலை பெற்று, பீ(க)ல்ட் மார்ஸல் பதவி பெற்று அமைச்சருமானார். சிராணி பண்டார நாயக்க அம்மையார் தன்னுடைய குற்றங்களில் இருந்து விடுதலை பெற்று ஒரு நாள் பிரதம நீதியரசராகி இராஜனாமா செய்து கொண்டார்.

இதற்கெல்லாம் இலங்கை சட்டத்தில் இடமிருந்தது. அவர்கள் இதனை செய்கின்ற பொழுது அந்த நல்லாட்சியில் சம்பந்தன் என்ன செய்து கொண்டிருந்தார்? அரசியல் கைதிகளின் விடுதலை, படை குறைப்பு, படையினரின் வசமுள்ள தமிழ் மக்களின் காணி இவைகளை பற்றி ஏன் பேசவில்லை? எனக்கு தெரிந்து பேசிய ஒரே பேரத்தால், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொகுசான வீடுகள் கட்டி, பல காணிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறிவிட்டார்கள்.

'சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை பெற எங்களுக்கு ஆணை தாருங்கள்' என்று அவரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

அப்படியானால் இதற்கு முன் நடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் பெறப்பட்ட ஆணைக்கு என்ன நடந்தது? தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார்கள்.

இந்த தேர்தலில் சம்பந்தன் குழுவினரின் தேர்தலுக்கான கபட நாடகத்தை தமிழ் மக்கள் அரங்கேற்ற விடமாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.