கருணாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் அரசியல் தலைவர்கள்! கவலை வெளியிட்டுள்ள தேரர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கருணா 3 ஆயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாக தெரிவித்த கூற்று தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளோம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மானை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கருணா அம்மான் விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்திய ஆயுத படைகளின் தலைவராக இருந்துகொண்டு அவர் மேற்கொண்ட கொலைகள் தொடர்பாக அவரின் நாவினாலே தெரிவித்திருந்தார். 3 ஆயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்டிருக்கின்றோம்.

அத்துடன் கருணாவின் கூற்றின் மூலம் பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தின் 81 ஆவது சரத்து மீறப்பட்டிருக்கின்றது. அதனால் உடனடியாக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கவேண்டும் என தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றோம்.

கொலை குற்றச்செயலை செய்ததாக உறுதி மொழி வழங்கும் கருணா அம்மானுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அனைவரும் இதுதொடர்பில் பொறுப்பு கூறவேண்டும். அதேபோன்று தற்போது கருணாவை தூய்மைப்படுத்த சில அரசியல் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.