30 வருடகால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல - எஸ்.பி.திஸாநாயக்க விடுத்துள்ள கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல, தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ராஜபக்சர்களின் ஆட்சி தொடர்பில் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாடு தவறானது. முப்பது வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல.

தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுத்தார்.

கடந்த அரசாங்கத்தில் எவ்வித அபிவிருத்தி பணிகளும் சுயமாக வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படவில்லை.

போலியான வாக்குறுதிகள் மாத்திரமே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கவில்லை.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக ராஜபக்சர்களுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்களை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்தார்கள்.

வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறான சித்தரிப்புக்களையே இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கிறார்கள்.

ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவே செயற்படுகிறார். அரசியல் கட்சிகளை இலக்காக கொண்டு அவர் செயற்படவில்லை.

தமிழ் - முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக முன்வைக்கும்குற்றச்சாட்டுக்களை விடுத்து யாதார்த்த நிலைமையினை புரிந்துக் கொண்டு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க ஒன்றுப்பட வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.