தங்கள் பொய்களுக்கு எதிராகவே பொய்களைச் சொல்கிறார்கள்! அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் கூறிய பொய்களை மறைக்க அரசாங்கம் புதிய பொய்களை கூறி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.“

மாத்தறையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அரசாங்கம் கூறிய பொய்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு அரசியல்வாதி அல்லாதவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை உருவாக்கி, கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், நாட்டை அவரை அபிவிருத்தி செய்ய விடுங்கள் எனவும் கூறியிருந்தனர்.

எனினும், தற்போது அதற்கு நேர்மாறாக சொல்கின்றனர். ஜனாதிபதியால் தனியாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்று கூறி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கோருகிறார்கள்.

கோட்டாபய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்.சி.சி ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் அதை செய்ய முடியாது என்று கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வர இதுபோன்ற பொய்களை சொல்லிக்கொண்டிருக்கின்றன. இப்போது, ​​அவர்கள் தங்கள் பொய்களுக்கு எதிராகவே பொய்களைச் சொல்கிறார்கள்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.