உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும்! சீ.வி.கே.சிவஞானம்

Report Print Dias Dias in அரசியல்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வட மாகாணசபையின் அவைத்தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்கில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2013ஆம் ஆண்டின் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நான்கு கட்சிகள் கூட்டமைப்பாக பெரும் வெற்றி கண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆனால் மாகாண சபையின் ஆட்சி காலம் முடியும் போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி முழுமையாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

மேலும் நீதியரசர் விக்னேஸ்வரன்,அனந்தி சசிதரன்,ஐங்கரநேசன் போன்றோர் தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டமைப்புக்கு எதிரான நிலையில் உள்ளனர்.

டெலோ அமைப்பும் இரண்டாக பிரிந்து ஒரு பிரிவினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ள டெலோ தலைமையினர் கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.இவ்வாறு பிரிந்து நின்று உதிரிகளாக தேர்தலில் போட்டியிடுவதால் எமது பிரநிதித்துவ பலம் சிதைவடையவே செய்யும்.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கக்கூடிய தேசியப்பட்டியல் ஆசனம் தென் பகுதிக்கு செல்லக் கூடிய அபாயம் தெளிவானது. மேலும் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடுகளும் பறிபோகும்.

ஆகவே எமது மக்கள் சிரமம் பாராது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையாக வாக்களிப்பதன் மூலம் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுது மட்டுமன்றி தேசியப்பட்டியலில் இரண்டு பேருக்கு கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும் இந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவரே யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் எனவே கட்சித் தலைவர் என்ற வகையில் அவர் வெற்றி பெற வேண்டியது அரசியல் ரீதியாக அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.