சம்பந்தன் திருகோணமலையில் தோற்கடிக்கப்படுவார்! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தனை எனது கட்சி வேட்பாளர் ரூபன் தோற்கடிப்பார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கு - கிழக்கில் எங்களுக்கு அமோக ஆதரவு இருக்கின்றது. மக்களை நேரில் சந்தித்த பின்னரே இது வெளிப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் திறமையான வேட்பாளர்களை அடையாளம் கண்டுள்ளோம்.

இந்நிலையில், திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தோற்கடிக்க கூடிய வகையில், எங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபனுக்கு ஆதரவு இருக்கின்றது.

அதேபோன்று மட்டக்களப்பிலும் எங்களது கட்சி வேட்பாளர் வெற்றிபெறும் வகையில் மக்கள் ஆதரவு இருக்கின்றது. அங்கு இரண்டு ஆசனங்களை பெறமுடியும்.

கிழக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்ப்பலைகள் உருவாகியிருப்பதை காணமுடிகின்றது. அதேபோன்று தேசிய கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கைகொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தினை பொறுத்த மட்டில் பல இடங்களுக்கு சென்று வருகின்றேன்.

கூட்டமைப்பின் பிரதி அணியாகவே மக்கள் எங்களை பார்க்கின்றனர். இந்த மாற்றம் எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றது என்றே சொல்லமுடியும்.

வன்னியிலும் அதேநிலைமை இருக்கின்றது. இந்நிலையில், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரலாற்றுக்குரிய ஆவணமாக தயாரிக்கப்படுகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.