மன்னார் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவிப்பு

Report Print Ashik in அரசியல்

மன்னாரில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் மற்றும் மன்னார் வங்காலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்கள் ஆகியோரது பி.சீ.ஆர். பரிசோதனை அறிக்கையினை எதிர்பார்த்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மன்னார் மாவட்ட மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வந்த கைதி ஒருவர் மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.

இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் காணப்பட்ட நிலையில் ஒரு கிழமைக்கு முன் விடுவிக்கப்பட்ட 40 கைதிகளை இலங்கை முழுவதும் மீள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டம் உப்புக்குளம் பகுதிக்கு தனது வீட்டிற்கு வந்த நபரும் வியாழக்கிழமை இரவு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த நபர் மன்னார் உப்புக்குளத்தில் கடந்த ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில் இவருடைய குடும்பத்தினரும், அவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிய ஏனைய இரண்டு குடும்பங்கள் உள்ளடங்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேர்கள் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் எதிர் வரும் 14 தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு குடும்பம் உப்புக்குளம் பகுதியிலும் ஏனைய இரண்டு குடும்பங்கள் கோந்தைப்பிட்டி கிராம பகுதியில் உள்ள வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு எதிர் வரும் 14 நாட்களின் பின்னர் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள். சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரின் பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கையினை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் மன்னார் வங்காலை பகுதியில் 7 மீனவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடலில் இந்திய மீனவர் ஒருவரின் டோலர் படகு பழுதடைந்த காரணத்தினால் குறித்த 7 மீனவர்களும் கடலில் இந்திய மீனவர்களுக்கு உதவிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பி.சி.ஆர்.பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளையும் எதிர் பார்த்துள்ளோம்.

மன்னார் மாவட்டத்தில் இது வரை எந்த ஒரு தொற்று நோயாளரும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நபர் சமூகத்தில் அதிக அளவில் சென்று பழகியதாக எமக்கு எந்த வித தகவலும் கிடைக்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் எந்த விதமான பதற்றம் அல்லது அச்சம் அடையத்தேவையில்லை. கொரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொண்டு மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.