ரணிலின் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்க முடியாது! பவித்திரா வன்னியாராச்சி

Report Print Murali Murali in அரசியல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இலங்கைக்கு ஒரு சதமேனும் நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினுடைய கேள்விகளுக்கு பதிலளித்து என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்புவது பற்றி முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பாரிய பொய் கூறினார். உலக சுகாதார ஸ்தாபனம் 4200 கோடி ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியதாகக் கூறினார்.

அதன் போது அது பற்றி நான் அவருக்கு விளக்கமளித்தேன். 2 மில்லியன் டொலர் மாத்திரமே உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து எமக்கு கிடைக்கப் பெற்றது. உலக சுகாதார ஸ்தாபனம் , உலக வங்கி என்ற இரண்டும் வேறு வேறாகும்.

128 மில்லியன் டொலர் உலக வங்கியிடமிருந்து எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மூன்று வருடங்களுக்கே அந்த நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய இந்த வருடத்திற்கு எமக்கு 22 மில்லியன் டொலர் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது.

அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிடைக்கப் பெற்ற நிதி பற்றியும் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய சங்கத்திலிருந்து எமக்கு ஒரு சதமேனும் கிடைக்கப் பெறவில்லை.

ஆனால் அவர் தொடர்ச்சியான இது பற்றி கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றார். என்னை பதிலளிக்குமாறு கோருகின்றார்.

அவர் இவ்வாறு கேள்வியெழுப்பிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் பதிலளித்திருக்கின்றேன். இதற்கு பின்னரும் அவரது கேள்விகளுக்கு பதிலளித்து என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது.” என அவர் கூறியுள்ளார்.